பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி- இயக்குனர்கள் உள்ளிட்ட 26பேர் பணியிட மாற்றம்

 

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி- இயக்குனர்கள் உள்ளிட்ட 26பேர் பணியிட மாற்றம்

பள்ளிக்கல்வித் துறையில் சமீபத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, பள்ளிக்கல்வி துறையில் 8 இயக்குனர்கள், 18 இணை இயக்குனர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி- இயக்குனர்கள் உள்ளிட்ட 26பேர் பணியிட மாற்றம்

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் பள்ளிக்கல்வித்துறையில் அதிரடியான பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளிக் கல்வித் துறையில் பல காலமாக இருந்த இயக்குனர் என்ற பதவி காலி செய்யப்பட்டு, ஐ.ஏ.எஸ் அதிகாரி பொறுப்பில் ஆணையருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாவட்ட வாரியாக சிறப்பாக செயல்பட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் கவனம் தேவைப்படும் மாவட்டங்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் பொறுப்பில் நான்கு அதிகாரிகளைத் தவிர 26 அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக இருந்த க.அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குனராகவும், தொடக்கக்கல்வி இயக்குனராக இருந்த மு.பழனிசாமி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலராக இருந்த எஸ்.சேதுராமவர்மா, அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனராகவும், அரசு தேர்வுகள் இயக்குனராக இருந்த சி.உஷாராணி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் எஸ்.சுகன்யா, பி.பொன்னையா, பி.குமார், கே.செல்வகுமார், எஸ்.சாந்தி, கே.சசிகலா, ஆர்.பாஸ்கரசேதுபதி, எஸ்.உமா, எம்.வாசு, த.ராஜேந்திரன், வை.குமார், கே.ஸ்ரீதேவி, வே.ஜெயக்குமார், சி.அமுதவல்லி, எம்.ராமசாமி, ச.கோபிதாஸ் உள்பட மொத்தம் 18 இணை இயக்குனர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.