Home சினிமா ’ஸ்பேஸ்க்கே போனாலும் ஸ்பேஸ் பத்தல’ கமல் ஜோக்கை உண்மையாக்கிய அனிதா! #BiggBoss4

’ஸ்பேஸ்க்கே போனாலும் ஸ்பேஸ் பத்தல’ கமல் ஜோக்கை உண்மையாக்கிய அனிதா! #BiggBoss4

ஆட்டத்தின் கடைசி ஓவரில் வீசப்படுவதை டாட் பால்களாக்கும் பேட்ஸ்மேன் போல பிக்பாஸ் வீட்டில் ஒருவர் இன்று செய்தார். அதற்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் கிண்டல் செய்யப்பட்டார். அப்படி செய்தது யார்… அவர் செய்தது கிண்டலடிக்கும் அளவுக்கு தவறுதானா… என்பதை இன்றைய எப்பிசோட் கட்டுரையில் பின்பகுதியில் அலசுவோம்.

25-ம் நாள்

‘ஆடுகளம்’ படத்தின் பாட்டுக்கு லுங்கியோடு ஆட, காலையிலேயே களை கட்டியது. சில நாட்களாக சோர்வோடு ஆடிக்கொண்டிருந்தவர்களிடம் இன்றுதான் பழைய உற்சாகத்தைப் பார்க்க முடிந்தது. அனிதா பழைய ஃபார்ம்க்குத் திரும்பி, முன்வரிசையில் ஆடினார். தூக்கம் கலையாமல் பாலா ஓரமாய் உட்கார்ந்திருந்தார்.

ஜாலியாக ஆடிக்கொண்டிருந்த, பாட்டு முடிந்ததுமே ‘தங்கமே’ டாஸ்க் தொடர்கிறது என்றதும் தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார். முதல் இம்சையே நிஷாக்குத்தான். அர்ச்சனாவுக்குப் பல் துலக்கி விட வேண்டுமாம். முகத்தைத் தண்ணீரால் கழுவதுவதுபோல கிண்டலடித்தார்.

டாஸ்க் ஒன்று கொடுத்தார் பிக்பாஸ். வீட்டை ஆளும் அணியினர் பற்றிய நல்ல குணங்களை மற்றவர்கள் சொல்ல வேண்டுமாம். இதுமாதிரி டாஸ்க் கொடுத்தால்தான் நல்ல விஷயம் பற்றி பேச்சே வருது.

ரியோ ராஜாவின் விடா முயற்சியைப் புகழ்ந்துகொண்டிருந்த ரம்யாவை கிண்டலடித்து, அவர் பேச்சின் பொருளையே மாற்ற முயல, ’குண்டு கிழவா’ என சிரித்துக்கொண்டே இடித்தார். கமல் சொன்னட ‘குழந்தை டாக்டர்’ சரிதான். வலிக்காம ஆனால் சரியாகக் குத்திவிடுகிறார் ரம்யா.

’நேர்மையான ஆள். வெளிப்படுத்துவதில்தான் ஆட்டிடியூட் இருக்கு’ என ஷிவானி சொன்னது… வேற யாரைச் சொல்வார் பாலாவைத்தான். கவின் – லாஸ்லியாவின் காட்சிகளைப் போல இந்த சீசனும் காணும் நாள் வெகு தூரத்தில் இல்லை போலும்.  

’என்ன கேட்டாலும் செஞ்சு கொடுக்கும் ராணி அர்ச்சனா’ என்று ஷனம் புகழ, ‘அன்னிக்கு எலுமிச்சை பழம்கூட தர மாட்டேங்குறாங்க’என்று குறுக்கே கட்டையைப் போட்டார் பாலா. அதை சமாளித்து ஓரங்கட்டினார்.

பாலாவின் கிண்டல், வீட்டுக்குள்ளே பெரிய சண்டையை வர வழைத்துவிட்டது. ‘நான் உங்கிட்ட தனியா இருக்கும்போது சொன்னதை நீ ஏன் அவங்கக்கிட்டேயே சொன்ன?’என்று ஷனம் கேட்க, அதுக்கும் நக்கலாகத்தான் பதில் சொல்லிட்டு இருந்தார் பாலா. அந்த நக்கலே ஷனத்தை இன்னும் உசுப்பேத்த, கடுப்பாகி வார்த்தைகளை இரைத்தார். ஒருவேளை இதுதான் பாலாவின் ஸ்டேட்டர்ஜியாக இருக்குமோ… ஏனெனில், அவர் தொடர்பான பல சண்டைகள் இப்படித்தான் தொடங்கின. ஒரு கட்டத்தில் மைக்கைக் கழற்றி ஷனமை அடிக்கவே சென்றுவிட்டார். இதில் பாலா கோபப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்றே புரியவில்லை. ‘ஒருவரைப் பற்றி தனியாக பகிர்ந்துகொள்வதை, சம்பந்தப்பட்டவரிடம் போட்டு உடைப்பது எவ்விதம் சரியாக இருக்கமுடியும்” அந்த விஷயம் சின்னதா… பெருசா என்பது யார் முடிவு செய்வது?

அது சிக்கலாகிறது என்று ஷனம் சொன்னவுடனே  புரிந்துகொண்டு ஒரு ‘ஸாரி’ பெயரளவில் கேட்டிருந்தால் பெரிய சண்டையாக மாறியிருக்காது. ‘சின்ன இடுப்பைப் பார்த்ததுக்கு…’ என ரமேஷ் அந்த சண்டையை கமெண்ட் செய்தார். ஜித்தன் சாரே… உங்க கமெண்ட்டை ஷனம் கேட்டிருந்தா, அதுக்கு ஒரு சண்டை வந்திருக்கும். ‘சின்ன புறாவுக்கு போரா?’ என தலைவன் வடிவேலுவின் கமெண்ட்தான் சரியாக இருக்கும்.

கிரீடம் படத்தில் யாருமே இல்லாத பஸ் ஸ்டாபில் ’கூட்டமா இருக்கு… காபி ஷாப்பில் பேசுவோமா?’என்று அஜித், திரிஷாவை தனியே கூட்டிச் செல்வதுபோல, வெயில் சூடு அதிகமா இருக்கு. குடை பிடி என ஷிவானியை தனியே அழைத்துக்கொண்டுச் சென்றார் பாலா (தல ரசிகர்கள் பொறுத்தருள்க… ஓர் உதாரணத்திற்காக சொன்னேன்) பிக்பாஸூம் உற்சாகமாகி தனியே அவர்களை ரொம்ப நேரம் போக்கஸ் செய்தார்.

ரொமான்ஸ் டயலாக் எல்லாம் இன்னும் ஆரம்பிக்க வில்லை. அம்மியில அரைக்க சொன்னது நியாயமா… இல்லையா… என்று பாலா கேட்க, ‘நீ குற்றாலத்துக்கு இல்ல… நயாகராவுக்கே போனாலும் ரும்லதான் குளிப்ப போலிருக்கே’ என்று மைண்ட் வாய்ஸ் என்று கேட்டது ஷிவானியின் மைண்ட் வாய்ஸா… இல்லை பிக்பாஸூடையதா என்று தெரியவில்லை.

’அம்மி அரைக்கிறது.. எனக்கே ரிவர்ஸாயிருச்சுனா…’ என ஷிவானி எச்சரிக்கையாக, ’அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். அந்த விஷயம் சரியா… தப்பான்னு சொல்லு’ என்றார் பாலா (முடியல…) ‘நல்ல விஷயம்தான்’ எனச் சொல்லி ஷிவானி எண்ட் கார்டு போட்டார். ரம்யா, ஷிவானியையும் ஒரு டெமோ போல அம்மி அரைக்க வைத்துவிட்டார் பாலா.

லக்ஸரி பட்ஜெட்க்கான பொருள்களை, தங்கமே டாஸ்க்கில் பொறுக்கிய தங்கத்தில் எடையைப் பொறுத்து தனித்தனியாக பாயிண்ட் கொடுத்து பொருட்களை எடுக்கச் சொன்னார். ஒரு வாரம் வீட்டுக்குத் தேவையான பொருட்களை அர்ச்சனா சொல்லி நெறிபடுத்திக்கொண்டிருந்தார். இஞ்சி பூண்டு பேஸ்ட் அட்டையை எடுத்து வந்தார் நிஷா.

அடுத்து சென்ற கேபி ’பீட்ஸா’ அட்டையை எடுத்துவர உற்சாகமாக எல்லோரும் கொண்டாட, ‘அதுல ஆறு பீஸ் இருக்கும். எங்களுக்கு எங்கே வர போவுது. இஞ்சி பூண்டு பேஸ்ட் எடுத்து திங்க வேண்டியதுதான்’ என்று கலாய்த்துகொண்டிருந்தார் நிஷா. அவர் சொல்வது ஒருவகையில் சரிதான். வீட்டில் எப்போதாவது பீட்ஸா வாங்கி வரும் அப்பாவுக்குக் கிடைக்கும் பாராட்டு, மூன்று நேரம் வடித்துக்கொட்டும் அம்மாவுக்குக் கிடைப்பதில்லை.

 ’ஐ வாண்ட் மோர் எமோஷன்’ என பாரதிராஜா ஸ்டைலில் ஆசைப்பட்ட பிக்பாஸ் அதற்கேற்ற டாஸ்கை அறிவித்தார். ‘நீங்கா நினைவுகள்’ இந்த வீட்டுக்கு வந்ததும் ரொம்பவும் மிஸ் பண்றவங்க யார்… என்ன காரணம்?’ டாஸ்க்கைப் படிக்கும்போதே அர்ச்சனா கண்ணுல ஜலம் வெச்சிட்டாங்க. அப்பவே பிக்பாஸ் முகத்தில் நம்பிக்கை ஒளி பிரகாசித்தது.

பிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக ரம்யாவின் அழுகை வெளிப்பட்ட நாள்;டாஸ்க். அர்ச்சனா திருஷ்டி சுத்தும்போது அம்மா ஞாபகம் வந்தது என்றவர் ஓரிரு நொடிகள் கண்கலங்கி, ‘அம்மா இதை விரும்ப மாட்டாங்க’ என தானே சட்டென்று ரெடியானானார். ரம்யா ஆர்மிக்காரர்கள் புரோமோ பார்த்துவிட்டு பதறி போயிருந்தார்கள். எமோஷனலைக் குறைங்கப்பா…

ரம்யாவுக்கு முன் கேபி, வந்து அம்மாவை மிஸ் பண்ணுவதை ‘லேசான  அழுகையோடு’ சொல்லிவிட்டு சென்றார். அதிலும் டீன் ஏஜில் சரியாக அம்மாவின் நெருக்கம் கிடைத்தது என்றபோது, ‘அப்போ இப்பா டீனேஜ் இல்லையா?’என கேபி ரசிகர்கள் அதிர்ந்தார்கள்.

தன் ஃப்ரெண்ட் பற்றி பேசினார் ஷனம். அவர் அழாமல் பேசியதே பெரிய விஷயம்தான். ஆனால், பிக்பாஸ்க்கு ஏமாற்றம். ‘அண்ணாமலை ரஜினி மாதிரி எங்கப்பா… சைக்கிள் ஓட்டி சம்பாதித்து, கார் வாங்கியவர்’ என அவரின் அப்பா ஆர்.பி.செளத்ரியைப் பற்றி ரமேஷ் சொன்னது ஆச்சர்யம்தான். சினிமா தயாரிப்பாளர் என்றதுமே நம் கற்பனையில் அவர் பரம்பரை கோடிஸ்வரர் என்பதாகவே இருக்கிறது.

சம்யுக்தா யாரை மிஸ் பண்ணுவார் என்று எல்லோருக்கும் தெரியும். அவரின் மகனைத்தான். ’சக்கரை’ என்று செல்லபெயர் வைத்துக்கூப்பிடுவாராம். நம்ம ஊரில் ‘இப்படி பட்டப்பெயர் வைத்து கூப்பிட்டதால் கொலை பண்ற வரைக்கும் போயிருக்காங்க’. கணவர் கார்த்திக் பற்றி அதிகம் சொன்னதில்லை என்று ஆரம்பித்தார். ஆனாலும், நிறைய சென்ஸார் போட்டுக்கொண்டு சொன்னதால் சரியாக விளங்க வில்லை. வீட்டினருக்குப் புரிந்திருக்கலாம்.

உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதிலும் சரியான சொற்களில் வெளிப்படுத்திவதிலும் சுரேஷ் வல்லவர். குவாரண்டைனில் இருந்த மகனை, தூரமாக இருந்து பார்த்ததையும், இரண்டரை ஆண்டுகளாக மனைவியைப் பார்க்காமல் இருப்பதையும் நறுக் என்று சொல்லி, ‘பாலாவைப் பார்த்தால்  என் மகன் போல இருக்கிறான்’என்று முடித்தார். கொரோனா ஆரம்பித்ததும் ஒரு வீடியோ சமூக ஊடகத்தில் பரவியது.

சிகிச்சை அளிக்கும் ஒரு டாக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட, வீட்டுக்கு வெளியே நின்று தம் பிள்ளைகளைப் பார்த்துச்செல்லும் காட்சி. பிறகு அந்த டாக்டர் இறந்துவிட்டார் என்று சொல்லப்பட்டது. தூர நின்று நெருங்கிய உறவுகளைப் பார்ப்பது கொடுமையானதுதான்.

”தொண தொண’ என அம்மா பேசும்போது திட்டிருக்கேன். இப்போதான் புரியது. அம்மா பேசறதுக்கு யாரும் இல்லங்கிறது” என்று ரியோ சொன்னது கிட்டத்தட்ட 60 யைத் தொட்ட, தொட இருக்கும் அனைத்து அம்மாக்களுக்கும் பொருந்தக்கூடியதே. மனைவி, மகள் பற்றி சுருக்கமாக ரியோ சொன்னது நெகிழ்ச்சியானது. 7 மாத குழந்தை மகள் ரித்தி, தன் சட்டையைப் பிடித்துகொண்டேதான் தூங்குவாள் என்றபோது ரியோ குரல் உடைந்தது.

பிக்பாஸால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ச்சனா வந்தார். ’20 வருஷம் டெலிவிஷன் வொர்க் பண்ணியாச்சு. ரெஸ்ட் வேணும்னு வந்தேன்’ என்று ஆரம்பித்தார். இத்தனை வருஷம் செய்த வேலையை டக்குனு மாத்த சொன்னால் கஷ்டம்தான். அம்மா, அக்கா, மகள், சித்தி என வரிசையாக மிஸ்ஸிங் பட்டியலை வாசித்தார். தன் தங்கை போல இருக்கிறார் என அர்ச்சனா கைக்காட்டியது ரம்யாவை. (ஆஹா… என்று உற்சாகமானார் ரம்யா) ’சீக்கிரம் வெளியே வந்துடுவேன்’ என்று முடித்தார் அர்ச்சனா.

‘நீங்க எப்போ உள்ளே போகனும்னு நான்தான் முடிவு பண்ணினேன். நீங்க வெளியே போகனும்னாலும் நான்தான் முடிவு பண்ணனும்’ என அஞ்சான் ராஜூ பாய் மாதிரி மைண்ட் வாய்ஸ் ட்ரை பண்ணினார் பிக்கி.

அடுத்து வந்தவர் அனிதா. புரோமோவில் அனிதாவை இன்செல்ட் செய்வதுபோல காட்டியிருந்ததால், ‘என்ன ஆச்சு?’ என்று ஆர்வம் வந்தது. ‘நான் முதல்ல மிஸ் பண்றது என் ஹஸ்பெண்டைத்தான்’ என்று சரியாகவே ஆரம்பித்தார் அனிதா. அப்பறம், அவர்களின் காதல் கதைக்கு தாவினார்.

 ‘வர்தா புயல் வீசும்போது ஆபிஸின் கீழே மொபைல் பவர் பேங்கைக் கொடுக்க ஒரு மணிநேரம் அவர் காதலர் (இப்போது கணவர்) நின்றதை விளக்கினார். உண்மையில் அது அனிதாவுக்கு உணர்வுபூர்வமான சம்பவம்தான். அதைச் சொல்லும்போதே கண்கள் கலங்க… குரல் உடைந்தது. ஆனால், ரொம்ப நீளமாகச் சொல்லிக்கொண்டே சென்றார். கன்னுக்குட்டின்னுதான் கூப்பிடுவான். என்னை அப்படி யாராவது கூப்பிட்டா எமோஷனாகிடுவேன் என்றதும், சம்யுக்தா ‘கன்னுக்குட்டி’ என்று கூப்பிட்ட, அதிலிருந்து லீட் எடுத்து பேச்சை நீட்டித்தார் அனிதா.  90’ஸ் கிட்ஸ் படங்கள் பார்ப்போம்… என இன்னும் சென்றுகொண்டே இருந்து, அடுத்து அம்மா கதைக்குத் தாவினார்.

முதலில் கொட்டாவி விட்டது கேபி. பின் ரம்யாவும் ஆஜித்தும் கிசுகிசுத்தார். ‘இது வேற டாஸ்க்கில் சொல்ல வேண்டியது இல்லையா’என ஷிவானி, பாலாவிடம் கேட்க, ‘ஆமா… ஆமா”என்றார். ‘நிறுத்த சொல்லுங்க’என்று பிக்கியிடம் மனுவும் கொடுத்தார். ‘தாத்தா நீங்க சொல்லி நிறுத்துங்க’ என கேபி சொன்னதற்கு ‘கையெடுத்து’கும்பிட்டார் சுரேஷ். தானே களத்தில் இறங்கறேன் என சம்யுக்தா ‘அனிதா ஒரு நிமிஷம்ம்மா… ஸாரி ரொம்ப லென்தா போகுது… யாரை மிஸ் பண்றயோ அவங்களைப் பற்றி சுருக்கமாக சொல்லும்மா” என்று சரியாகச் சொன்னார். ஓரிரு நிமிடங்களில் முடித்து நன்றி வணக்கம் போட்டார் அனிதா.

கீழே இறங்கிய அனிதா ’பிக்பாஸ் எடிட் பண்ணிப்போட்டுப்பார். நீங்களா ஏன் நிறுத்துனீங்க.. மத்த்வங்களுக்கு இப்படி பண்ணின்னீங்களா… ஏன் என் ஸ்பேஸை தடுக்கிறீங்க?” எனப் பொங்கிவிட்டார். இப்போதுதான் நாம் டாட் பால் ஆடிய பேட்ஸ்மேன் உதாரணத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

100 நாட்கள் உள்ளேதான் இருக்க போகிறார்கள்… இந்த டாஸ்க் முடிந்து தூங்கத்தான் போகிறார்கள்… இன்னும் கொஞ்ச நேரம் கேட்டால்தான் என்ன? என்று அனிதா நினைப்பதில் எந்தத் தவறும் இல்லைதான். ஆனால், அளவுக்கு மீறினால் அமிர்தமும்…என்ற பழமொழிதான். முன்னே உள்ளவர்கள் சுருக்கமாக பேசியதில், ‘இவ்வளவு நேரம்தான் எங்களால் கேட்கவும் முடியும்’ என்ற விஷயமும் இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக அனிதா பேசுவது போரடிக்கும் விஷயம் என்பதல்ல. சுருக்கமாகக் கொடுக்க வேண்டும் என்பதே.

இதை டீசண்டாகச் சம்யுக்தா சொல்லியபிறகு, எனக்கு ஸ்பேஸே இல்ல’ என அனிதா குமுறுவதைப் பார்க்கும்போது, ‘ஸ்பேஸ்க்கே போனாலும் ஸ்பேஸ் இல்லன்னுதான் சொல்வாங்க’ என்று கமலின் ஜோக்தான் நினைவுக்கு வருகிறது.

அடுத்து வந்தவர் நிஷா ’அம்மா, கணவர், பிள்ளைகள்… என வரிசையாக மிஸ்ஸிங் பட்டியலை வாசித்தவர், கடைசியாக ‘லவ் யூ பிக்பாஸையும் மறக்க வில்லை’ இதுக்கு பிக்பாஸின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும் என்றுதான் கேட் பண்ண முடியவில்லை.

நிஷாவின் புரபோஷலை வாங்கிய பிக்கி, கதை சொல்லும் வெள்ளைச்சாமி யாட்டும் பின்கதை சொல்லத் தொடங்க, முடிவுக்கு வந்தது எப்பிசோட்.

பிக்பாஸ் பற்றிய முந்தைய பகுதிகளைப் படிக்க கீழ் உள்ளவற்றில் கிளிக் செய்க

ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து

ஆறு ஏழு | எட்டு | ஒன்பது | பத்து

பதினொன்று பன்னிரெண்டு | பதிமூன்று | பதிநான்கு | பதினைந்து

பதினாறு | பதினேழு | பதினெட்டு | பத்தொன்பது | இருபது

இருபத்தி ஒன்று | இருபத்தி இரண்டு | இருபத்தி மூன்று | இருபத்தி நான்கு

மாவட்ட செய்திகள்

Most Popular

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பம் காட்டாத தொண்டர்கள்!

தேமுதிகவில் விருப்ப மனு மந்தமாக விநியோகம் செய்யப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்...

ரூ.1 கோடி பரிசுப்பொருட்களை பதுக்கிய அதிமுக… தட்டித் தூக்கிய திமுக!

தமிழகத்தில் தேர்தல் குறித்தான அறிவிப்பை நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்திற்குப்...

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி!

திருப்பத்தூர் காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்...

பும்ராவுக்கு திருமணமா? – 4ஆவது டெஸ்டிலிருந்து வெளியேற்றத்திற்கான பின்னணி!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் நடைபெற்றன. குறிப்பாக, மூன்றாவது போட்டி இரு நாட்களுக்கும் குறைவான நேரத்திலேயே முடிவடைந்தது. இச்சூழலில் கடைசிப் போட்டி அகமதாபாத்தில்...
TopTamilNews