யார் தலைவர்? தமிழக சட்டப் பேரவையில் நடக்கும் நாற்காலி சண்டை

 

யார் தலைவர்? தமிழக சட்டப் பேரவையில் நடக்கும் நாற்காலி சண்டை

யார் தலைவர்? என்ற போட்டா போட்டியால் சட்டப்பேரவைக்குள் இரண்டு நாட்களாக நடந்து வரும் நாற்காலி சண்டையினால் கூட்டத்தொடரில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியும் உட்பூசலும் என்பது எப்போதுமே பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் இந்த உட்பூசல் சட்டப்பேரவையிலும் வெடிப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

யார் தலைவர்? தமிழக சட்டப் பேரவையில் நடக்கும் நாற்காலி சண்டை

சட்டமன்றத்தில் ஒவ்வொரு கட்சியின் சார்பாகவும் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்ற ஒவ்வொரு கட்சிகளின் சார்பாகவும் சட்டப்பேரவை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக, திமுக, பாமக, விசிக கட்சிகள் இப்படித்தான் சட்டப்பேரவை கட்சி நிர்வாகிகளை அறிவித்திருக்கிறது. இதில் திமுக அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக உறுப்பினர்களை கொன்ற காங்கிரஸ் கட்சி இன்னும் சட்டப்பேரவை கட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அறிவிக்கவில்லை. இதனால் சட்டப்பேரவையில் தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது.

யார் தலைவர்? தமிழக சட்டப் பேரவையில் நடக்கும் நாற்காலி சண்டை

நடந்து இந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வென்று சட்டப்பேரவைக்கு 18 உறுப்பினர்கள் காங்கிரஸ் சார்பில் அமர்ந்துள்ளனர். ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலைவர் இன்னமும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த 7 ஆம் தேதி அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் ஜே. ஜி. பிரின்ஸ் -விஜயதாரணி இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியதால் அன்றைய தினம் யார் தலைவர் என்பதை முடிவு செய்ய முடியாமல் போனது. இதனால் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் சோனியா காந்தியே தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுப்பார் என்று கட்சித் தலைமை அறிவித்தது. ஆனாலும் இதுவரை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் யார் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதனால்தான் இத்தனை பிரச்சனையும்.

சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான திமுக உறுப்பினர்கள் அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிர் வரிசையில் முதல் இருக்கையில் எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்திருக்கிறார். அதற்கு அடுத்ததாக முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அமர்ந்துள்ளார். இதை அடுத்து மூன்றாவதாக பாமக சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே. மணி அமர்ந்திருக்கிறார். நான்காவது இடத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அமரவேண்டும்.

முதல்வர் நாள் கூட்டத்தொடரில் அந்த இடத்தில் விஜயதாரணி அமர்ந்திருந்தார். ஆனால் நேற்றைய கூட்டத்திற்கு விஜயதாரணிக்கு முன்னதாகவே காலை 9 மணிக்கே வந்துவிட்ட ஜே.ஜி. பிரின்ஸ், முதல்நாளில் விஜயதாரணி அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்துவிட்டார். அடுத்து வந்த விஜயதாரணி, தான் அமர்ந்திருந்த இடத்தில் பிரின்ஸ் உட்கார்ந்துவிட்டதை பொறுக்க முடியாமல், அதற்கு முன்னதாக, ஜி.கே.மணி இருக்கையில் அமர்ந்துவிட்டார்.

யார் தலைவர்? தமிழக சட்டப் பேரவையில் நடக்கும் நாற்காலி சண்டை

கூட்டம் தொடங்கிய நேரத்தில்தான் 9.58 மணிக்கு ஜி.கே. மணி வந்தார். தனது இருக்கையில் விஜயதரணி அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், என்ன செய்வது என்று யோசிப்பதற்குள், கூட்டம் தொடங்கி விட்டதால், அவர் பின்னால் சென்று விஜயதரணிக்கு பின் இருக்கையில் அமர்ந்து விட்டார்.

இதற்குள் சபாநாயகராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமர வைக்கப்பட்டார் அப்பாவு. அவரை வாழ்த்த ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் அக்கட்சியின் சட்டமன்ற தலைவர்கள் எழுந்து நின்று வாழ்த்து கூறி வந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேச பிரின்ஸ் அழைக்கப்பட்ட போது, தானும் பேசவேண்டும் என்று விஜயதரணி கையை உயர்த்தினார்.

ஆனால் அவருக்கு பேச வாய்ப்பு வழங்கவில்லை. பிரின்ஸ் மட்டும் வாழ்த்து சொன்னார். அவரை தொடர்ந்து அடுத்து பேசுவதற்காக ஜி.கே. மணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அமர்ந்திருந்த முன் வரிசையில் இருந்த மைக்குக்கே மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் எழுந்து வந்து, விஜயதரணி இருக்கையில் இருந்த மைக்கில் பேசினார். இதனால் வேறு சங்கடத்தில் விஜயதரணி எழுந்து பின் வரிசைக்கு சென்றுவிட்டார். ஜி.கே.மணி பேசி முடித்ததும் தனது இருக்கையிலேயே, விஜயதரணி ஆக்கிரமித்த இருக்கையிலேயே அமர்ந்துவிட்டார்.

யார் தலைவர்? தமிழக சட்டப் பேரவையில் நடக்கும் நாற்காலி சண்டை

எல்லோரும் வாழ்த்திய பின்னர் ஏற்புரை வழங்கி பேசியபோது, ஒரு கட்சியில் ஒருவர் பேசத்தான் அனுமதி வழங்க முடியும். இரண்டு பேருக்கு அனுமதி வழங்கினால் முதல் கோணல் முற்றிலும் கோணலாகிவிடும் என்று விஜயதரணிக்கு வாய்ப்பு கொடுக்காமல் போனதற்கு விளக்கம் சொன்னார்.

யார் தலைவர்? என்று தலைமை அறிவிக்காத வரையிலும் இந்த மோதல் வெவ்வேறு வடிவங்களில் சட்டமன்றத்தில் வெடிக்கும் என்பதால், காங்கிரஸ் தலைமை விரைந்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே அனைத்துக் கட்சியினரின் விருப்பமாக இருக்கிறது.