சென்னையில் வயதான தம்பதியிடம் 250 சவரன் கொள்ளை அடித்த வழக்கில் தங்க கட்டிகளாக 170 சவரன் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை திநகர் சாரதாம்பாள் தெருவில் வசிப்பவர் நூரில்ஹக் (71). இவரது மனைவி ஆயிஷா. இவர்களுடன் ஆயிஷா அக்கா மகன் முஸ்தபா, பேரன் மொய்தீன் உள்ளிட்டோர் வசித்து வந்துள்ளனர். கடந்த வாரம் இவர்களின் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் அனைவரையும் அரிவாளை காட்டி மிரட்டி 250 சவரன் தங்க நகை, 1 லட்ச ரூபாய் பணம், 60 ஆயிரம் மதிப்பிலான வாட்ச் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

அத்துடன் வீட்டிலிருந்த காரையும் திருடியதுடன் முஸ்தபாவையும் காரில் கடத்தி கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் அவர் திநகரில் உள்ள துணிக்கடை வாசலில் அவரை இறக்கிவிட்டு விட்டு அந்த கும்பல் காரில் தப்பித்துள்ளது.
இந்த துணிகர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாண்டிபஜார் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வயதான தம்பதியிடம் 250 சவரன் கொள்ளை அடித்த வழக்கில் தங்க கட்டிகளாக 170 சவரன் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளையடித்த நகைகளை மும்பையில் தங்க கட்டிகளாக மாற்றியதை அறிந்து தனிப்படை போலீசார் அவற்றை அதிரடியாக மீட்டுள்ளனர். இருப்பினும் வயதான தம்பதியிடம் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி மொய்தீன் தொடர்ந்து தலைமறைவாகவுள்ளார்.

இதனிடையே முஸ்தபாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்ததால் நூரில்ஹக் வீடு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.