25 வயதுக்கு மேற்பட்டோரும் நீட் தேர்வு எழுதலாம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

25 வயதுக்கு மேற்பட்டோரும்  நீட் தேர்வு எழுதலாம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டோரும் நீட் தேர்வு எழுதலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டோரும் நீட் தேர்வு எழுதலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழகத்தில் வலுத்து வந்தாலும் தேர்வு நடைபெற்றே வருகிறது. இதற்கிடையே நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்ச வரம்பு குறித்து சிபிஎஸ்இ கடந்த ஜனவரி 22-ம் தேதி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பொதுப்பிரிவு மாணவர்கள் நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு 25 எனவும், இட ஒதுக்கீட்டு மாணவர்கள் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு 30 எனவும் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து கேரளாவை சேர்ந்த மாணவர்கள் சிபிஎஸ்இ-யின் அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் பொதுபிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது என்றும், இட ஒதுக்கீட்டு பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது என்றும் சிபிஎஸ்இ-யின் அறிவிக்கையை உறுதி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டோரும் நீட் தேர்வை எழுதலாம் எனவும் இறுதி தீர்ப்புக்கு அனைத்து உத்தரவுகளும் கட்டுப்பட்டது எனவும் கூறியுள்ளது. 

மேலும் 2019-ம் ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கும் நீட் தேர்வு எழுத மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி (நாளை) என கூறப்பட்டிருந்தது. ஆனால் விண்ணப்பிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம் அளித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.