எடப்பாடிக்கு வந்த சாதகமான சமிக்ஞைகள்

 

எடப்பாடிக்கு வந்த சாதகமான சமிக்ஞைகள்

ப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்கியதுமே ராக்கெட் வேகத்தில் சென்றதை பார்த்து, ‘இது ஆட்சிக்கு எதிரான அலை’ என்ற பரபரப்பு பேச்சு திமுகவினரால் எழுந்தது. ஆனால் மதியம் ஆகியும் 40 சதவிகிதத்திற்கு மேல் தாண்ட முடியாமல் வாக்குப்பதிவு திணறியதால், அதுவரையிலும் உற்சாகம் இழந்து காணப்பட்ட அதிமுகவினர் கொண்டாட்ட மனநிலைக்கு வந்து விட்டனர். ஆட்சிக்கு எதிரான அலை என்ற பேச்சு காணாமல் போய்விட்டது. இது அதிமுக மீண்டும் மலருவதற்கான வாக்குப்பதிவு தான் என்ற பேச்சு எழுந்தது.

எடப்பாடிக்கு வந்த சாதகமான சமிக்ஞைகள்

ஆனாலும் 72. 81 சதவீத வாக்குகளில் ஆண்களைவிட பெண்களே அதிகம் வாக்களித் திருக்கிறார்கள் என்ற விவரம் இரு கட்சிகளையும் அதிகம் பேச வைத்திருக்கிறது. இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தருவதாக திமுக அறிவித்ததால் தான் பெண்கள் வாக்கு அதிகம் விழுந்திருக்கிறது. அதிமுக இதை விட 500 ரூபாய் அதிகம் சேர்த்து சொன்னாலும், அவர்கள் பேச்சை பெண்கள் நம்பியிருக்க மாட்டார்கள். திமுக தானே முதலில் அறிவித்தது அக்கட்சி அறிவித்ததற்கு பின்னர் தானே அதிமுக அறிவித்தது என்று அதிமுகவின் மேல் நம்பிக்கை இல்லாமல் நமக்குத்தான் பெண்கள் அதிகம் வாக்களித்திருக்கிறார்கள் என்று திமுகவினர் தரப்பில் பேசப்பட்டு வந்தது.

எடப்பாடிக்கு வந்த சாதகமான சமிக்ஞைகள்

அதிமுகவினர் இல்லத்தரசிகளுக்கு 1500 ரூபாய் என்கிற மேட்டரையே விட்டுவிட்டனர். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் இலவசம் என்று அறிவித்தது தான் பெண்களை அதிகம் கவர்ந்து விட்டது. அதனால் பெண்களின் வாக்குகள் அதிகமாக இருக்கிறது. அந்த வாக்கு சதவிகிதம் அதிமுகவுக்கு தான் சாதகம் என்று அவர்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

இது எந்த அளவுக்கு உண்மை என்பதில் இரு கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களிடம் தொடர்ந்து பேசி ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேர்தல் முடிந்த உடனேயே சேலம் சூரமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த முதல்வரை, கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சரும் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சரும் சந்தித்து பேசி தங்கள் பகுதிகளில் வன்னியர்களின் வாக்கு சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அறிவித்ததால் அச் சமூக மக்களின் வாக்குகள் அதிகம் நமக்கு விழுந்திருக்கிறது என்று அவர்கள் உற்சாகம் காட்ட, முதல்வரோ தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் சொன்ன தகவலைச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.

எடப்பாடிக்கு வந்த சாதகமான சமிக்ஞைகள்

தெற்கு மண்டலத்தில் அமமுகவினர் பலத்தினால் அதிமுகவுக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அம்மண்டல அமைச்சர் சொன்னதை வைத்து கிழக்கு மண்டல வடக்கு மண்டல அமைச்சர்களிடம் வருத்தத்துடன் பேசி வந்திருக்கிறார். தெற்கு நிலைமைதான் என்னாகுமோ என்று அதிகம் கவலை தெரிவித்திருக்கிறார்.

இதன் பின்னர் துணை முதல்வரின் மாமியார் மறைவுக்கு துக்கம் விசாரிக்க சென்றுவிட்டு சென்னை வந்த முதல்வர் அனைத்து அமைச்சர்களையும் அழைத்து, ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். ஒவ்வொருவரும் சொல்லும் தொகுதி நிலவரங்களை முழுமையாக கவனத்துடன் கேட்டு வாங்கியிருக்கிறார்.

எடப்பாடிக்கு வந்த சாதகமான சமிக்ஞைகள்

சிலர் தங்கள் தொகுதியில் அமமுக – திமுகவின் செல்வாக்கு ஓங்கி இருந்ததை சொல்லி புலம்பினாலும் அவர்கள் அத்தனை பேருக்கும், 130 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விடுவோம். அந்த நம்பிக்கையில் இருங்கள் என்று எல்லோருக்கும் நம்பிக்கையூட்டி இருக்கும் முதல்வர், அதிலும் சிலர் திருப்தி இல்லாமல் இருந்தவர்களிடம், எனக்கு சாதகமான சமிக்ஞைகள் சில கிடைத்திருக்கின்றன. அதனால்தான் சொல்கிறேன் 130 தொகுதிகளை கைப்பற்றி நாம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விடுவோம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார் முதல்வர்.