எழும்பூரில் இரட்டை இலையில் ஜான்பாண்டியன்

 

எழும்பூரில் இரட்டை இலையில்  ஜான்பாண்டியன்

அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஜான் பாண்டியனுக்கு எழும்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இதற்கான உடன்படிக்கை நடந்துள்ளது.

எழும்பூரில் இரட்டை இலையில்  ஜான்பாண்டியன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேனிமொழி, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னதாக அவர் அதிமுகவில் விருப்பமனு கொடுத்திருந்தார். அவருடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். அதிமுக கூட்டணியில் இருக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன், நிலக்கோட்டை தொகுதியில் தனக்கு சீட் ஒதுக்குமாறு அதிமுகவிடம் கேட்டு வந்தார்.

அதிமுக அதற்கு ஒப்புதல் தரும் முன்பாகவே, ‘நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் ஜான் பாண்டியனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்’ என்ற போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, தேன்மொழி தரப்பினரை அதிரவைத்தது. ஆனாலும், தேன்மொழியே வென்றுவிட்டார்.

இதனால் அதிருப்தியில் இருந்த ஜான் பாண்டியன் ஆதரவாளர்களுக்கு, அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமகவின் வேட்பாளர்கள் பட்டியலில் ஜான்பாண்டியன் பெயர் இருப்பதாக தகவல் வந்தது.

எழும்பூரில் இரட்டை இலையில்  ஜான்பாண்டியன்

அதிமுக கூட்டணியில் 2 தனி தொகுதிகள் உள்பட 23 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டு தனி தொகுதிகளில் ஒன்றில் வடிவேல் ராவணன் நிற்கிறார் என்று பாமக தரப்பில் கூறப்படுகிறது. இன்னொரு தனி தொகுதியில் ஜான் பாண்டியனை நிற்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வந்தது. ஆனால், அதிமுக சார்பில் எழும்பூர்(தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இதுகுறித்து ஜான்பாண்டியன், ‘’06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் , தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எழும்பூர் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்’’ என்று தெரிவித்துள்ளார்.