2025 முதல் எல்லா டூ வீலர்களும் எலக்ட்ரிக்தான்! நிறுவனங்களுக்கு நிதி ஆயோக் எச்சரிக்கை…..

 

2025 முதல் எல்லா டூ வீலர்களும் எலக்ட்ரிக்தான்! நிறுவனங்களுக்கு நிதி ஆயோக் எச்சரிக்கை…..

2025ம் ஆண்டு முதல் 150 சி.சி. திறனுக்கு குறைவான அனைத்து இரு, மூன்று சக்கர வாகனங்களும் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு திட்ட அமைப்பான நிதி ஆயோக் கட் அண்டு ரைட்டாக சொல்லி விட்டது.

நிதி ஆயோக்

காற்று மாசுவால் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர். மேலும் காற்று மாசுவால் சுவாச கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்கள் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. மேலும் காற்று சுற்றுப்புறச் சூழலுக்கும் பெரிய ஆபத்தாக உருவெடுத்து நிற்கிறது காற்று மாசு. காற்று மாசு அடைய வாகனங்கள் வெளியிடும் புகையும் முக்கிய காரணம். அதனால் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

மத்திய அரசும் காற்று மாசுவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதற்கு ஒரளவு வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் திட்ட அமைப்பான நிதி ஆயோக் இது தொடர்பாக அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இ ஸ்கூட்டர்

நிதி ஆயோக் நேற்று இந்தியாவின் முன்னணி இரு, மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ப் அப் மின்சார வாகன நிறுவனங்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தது. நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் மற்றும் தலைமை செயல் அதிகாரி  அமிதாப் கந்த் ஆகியோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

அந்த கூட்டத்தில், 2025ம் ஆண்டுக்குள் 150 சி.சி. திறனுக்கும் குறைவான அனைத்து இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களும் மின்சார வாகனங்களாக தயாரிப்பதற்கு தேவையான உறுதியான நடவடிக்கைகளை நிறுவனங்கள் எடுக்க வேண்டும். மாசு பிரச்சினை தீர்க்க இந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்று நிறுவனங்களுக்கு நிதி ஆயோக் எச்சரிக்கை செய்தது.