நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் கணிப்பு

 

நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் கணிப்பு

நிறுவன நிதி நிலை முடிவு, கொரோனா வைரஸ் தடுப்பூசி உள்ளிட்டவை இந்த வாரம் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்தியன் வங்கி, பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ், யெஸ் பேங்க் மற்றும் இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் இந்த வாரம் கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளன. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் திட்டத்தை கடந்த சனிக்கிழமையன்று நம் நாடு தொடங்கியது. தற்போது நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்து விட்டது. அதேசமயம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் அதிகரித்து கொண்டு இருக்கிறது.

நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் கணிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தொடர்பான எதிர்பார்ப்புகள் பங்கு சந்தையில் எதிரொலிக்கும். இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஜனவரி 18-20) மற்றும் இண்டிகோ பெயிண்ட்ஸ் (ஜனவரி 20-22) ஆகிய நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகின்றன. இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை அதிகரித்து வருகின்றனர்.

நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் கணிப்பு
ஜோ பைடன்

வரும் வியாழக்கிழமையன்று அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். ஆகையால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது மற்றும் பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிப்பது தொடர்பான அறிவிப்புகளை அவர் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ஐப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் இந்த வாரம் வெளிவர உள்ளது. இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை நிலவரம், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.