பங்குச் சந்தையில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 

பங்குச் சந்தையில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், ஐ.டி.சி., கோல் இந்தியா, டாடா ஸ்டீல், எய்ஷர் மோட்டார்ஸ், கெயில் இந்தியா உள்பட சுமார் 2,400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது 2020 டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளன. கடந்த டிசம்பர் மாத தொழில்துறை உற்பத்தி மற்றும் கடந்த ஜனவரி மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் வரும் 12ம் தேதி வெளிவருகிறது. கடந்த ஜனவரி 29ம் தேதியுடன் முடிவடைந்த 15 தினங்களில் வங்கி வழங்கிய கடன் மற்றும் திரட்டிய டெபாசிட் தொடர்பான புள்ளிவிவரம் மற்றும் பிப்ரவரி 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்திய அன்னிய செலாவணியின் கையிருப்பு குறித்த புள்ளிவிவரமும் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளிவர உள்ளது.

பங்குச் சந்தையில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
ஐ.டி.சி.

இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் திட்டம் திட்டமிட்டப்படி சரியாக நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த 1 மாதமாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்து விட்டது.

பங்குச் சந்தையில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
தடுப்பூசி போட்டு கொள்ளும் சுகாதார பணியாளர் (கோப்புப்படம்)

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த வாரம் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் இந்த வார பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.