எவை எவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்?…. நிபுணர்கள் முன்னறிவிப்பு..

 

எவை எவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்?…. நிபுணர்கள் முன்னறிவிப்பு..

புதிய பங்கு வெளியீடு, நிதிநிலை முடிவுகள் இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

உடல்நலம் மற்றும் ஆரோக்கிய பொருட்கள் விநியோக வர்த்தக நிறுவனமான நுரேகா, ரூ.100 கோடி மதிப்பிலான புதிய பங்கு வெளியீட்டை வரும் 15ம் தேதியன்று தொடங்குகிறது. வரும் 17ம் தேதி பங்கு வெளியீடு முடிவடைகிறது. அரசுக்கு சொந்தமான தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வழங்கும் நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் புதிய பங்கு வெளியீடு 16ம் தேதி தொடங்குகிறது. வரும் 18ம் தேதி பங்கு வெளியீடு முடிவடைகிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் நெஸ்லே இந்தியா, அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் உள்பட 44 நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளன.

எவை எவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்?…. நிபுணர்கள் முன்னறிவிப்பு..
புதிய பங்கு வெளியீடு

அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். இந்த வாரத்திலும் அது தொடர்ந்தால் பங்குச் சந்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதை காட்டிலும் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்துள்ளனர். சுகாதார பணியாளர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது. நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விகிதம் 97.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்சமயம் 1.36 லட்சம் பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எவை எவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்?…. நிபுணர்கள் முன்னறிவிப்பு..
கோவிட்-19 தடுப்பூசி

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் இயல்புநிலை திரும்ப தொடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 62 டாலர் என்ற அளவில் உள்ளது. தேவை அதிகரிப்பால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அது இந்தியாவுக்கு பாதகமாக இருக்கும். ஏனென்றால் நம் நாடு அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. கடந்த ஜனவரி மாத மொத்த விலை பணவீக்கம், வர்த்தக பேலன்ஸ் புள்ளிவிவரம் தொடர்பான புள்ளிவிவரங்கள் இன்று வெளிவருகிறது. கடந்த 12ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்பான புள்ளிவிவரம் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளிவருகிறது. இது தவிர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்த வாரம் பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.