2021 – புதிய வாய்ப்புகளை எதிர்நோக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்!

 

2021 – புதிய வாய்ப்புகளை எதிர்நோக்கும்  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்!

கொரோனா பெருந்தொற்று காரணமாக, தகவல் தொழில்நுட்பத் துறை 2020 ஆம் ஆண்டில் மிகப் பெரிய இழப்புகளை சந்தித்தது. இந்த இழப்புகளில் இருந்து 2021 ஆம் ஆண்டில் மீண்டு, புதிய வேகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை பயணிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பின் உருவாகியுள்ள புதிய இயல்பு வாழ்க்கை, புதிய புதிய வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. அதனால் 2021 ஆம் ஆண்டு ஐடி துறைக்கு பொற்காலமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்திய ஐடி துறை சந்தை சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. இந்திய ஐடி நிறுவனங்கள் பல நாடுகளிலும் சந்தை கொண்டுள்ளதுபோல, இந்தியாவும் ஐடி துறைக்கு மிகப்பெரிய சந்தையாகும். கொரோனா அச்சம் தொடங்கிய உடனேயே உலக நாடுகள் ஊரடங்கு அமல் படுத்தின. அதையடுத்து இந்தியாவும் ஊரடங்கு அமல்படுத்தியது. கொரோனா அச்ச காலம் தொடங்கியதும் இந்திய ஐடி துறை முன் இரண்டு முக்கிய சவால்கள் எழுந்தன.

2 முக்கிய சவால்கள்!

முதலில், தங்கள் தொழில் தொய்வில்லாமல் நடக்க வேண்டும். இரண்டாவது தங்களது வாடிக்கையாளர்களும், பணியாளர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மற்றொரு சவாலாக இருந்தது. முக்கிய நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை வெளிநாடுகளில் பணிக்கு அமர்த்தி இருந்த நிலையில் , அவர்களை சொந்த நாட்டுக்கு திரும்ப அழைத்து வர வேண்டிய சவாலை எதிர்கொண்டன.

2021 – புதிய வாய்ப்புகளை எதிர்நோக்கும்  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்!


நிறுவனங்கள் உடனடியாக, தனி விமானங்கள் ஏற்படுத்தி பணியாளர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அழைத்தன. குறிப்பாக குறுகிய காலத்திலேயே ஐடி நிறுவன பணியாளர்கள் அனைவரும், வீடுகளிலிருந்து பணியாற்றும் வகையில் சாத்தியங்களை உருவாக்கினார் . இதனால் சுமார் 99 சதவீத ஐடி பணியாளர்கள் ஒரு சில நாட்களிலேயே ’வொர்க் ப்ரம் ஹோம்’ என்கிற சிஸ்டத்திற்கு மாறிவிட்டனர்.

இதனால் பணியாளர்கள் பாதுகாக்கப்பட்டதுடன் , வாடிக்கையாளர்களின் சேவைகளிலும் தொய்வும் ஏற்படாமல் நிறுவனங்கள் பார்த்துக்கொண்டன. அதே நேரத்தில் தொழில்கள் தொய்வடையாமல் அடையாமல் பார்த்துக் கொள்வது மிகப் பெரிய சவாலாக இருந்தது. புதிய வாய்ப்புகள், புதிய ஒப்பந்தங்கள் நிறுவனங்களுக்கு கிடைக்கவில்லை. நாடுகளிடையே வர்த்தகம் குறைந்ததால், தொழில்துறையில் மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டது. இதனால், 2008ஆம் ஆண்டில் ஏற்பட்டதுபோல மந்த நிலை உருவானது. ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பும் நடந்தன. இது ஐடி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலக அளவிலான அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த தேக்கம் ஏற்பட்டது.

பொருளாதார மந்தம்!

இந்த சூழல் 2021 ஆம் ஆண்டில் மாறும் என நம்பலாம் என்கின்றன ஐடி நிறுவனங்கள். 2008 ஆம் ஆண்டில் நடந்த மந்த நிலை என்பது பொருளாதார ரீதியான மந்தநிலை. ஆனால் 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மந்த நிலைக்கு , பொருளாதரம் காரணமல்ல, புதிய சூழல் காரணமாக இருந்தது. அதை எப்படி எதிர்கொள்வது என்பது புதிய சவாலாக உலக நாடுகளுக்கு இருந்தது. ஐடி நிறுவனங்களுக்கான தொழில்களை அளிக்கும் முக்கிய நிறுவனங்கள் வர்த்தக இழப்பு கண்டதால் புதிய புதிய வாய்ப்புகளை அளிக்கவில்லை. அதை எதிர்கொண்டு தற்போது புதிய நார்மல் என்கிற வாழ்க்கை முறைக்கு வந்துவிட்டோம். அதே நேரத்தில் ஐடி துறை புதிய மாற்றம் கண்டுள்ளது.

2021 – புதிய வாய்ப்புகளை எதிர்நோக்கும்  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்!

பெரும்பான்மையான நிறுவனங்கள் தங்களது தகவல் தொழில்நுட்ப சேவைகளை மாற்று வழியில் பயன்படுத்த தொடங்கின. பணியாளர்களை வீடுகளில் இருந்து வேலை செய்ய அனுமதித்தன. அதனால் , சந்திப்புகள், ஆலோசனைகள் ஆன்லைன் வழியாக மாறியது. அதனால் ஐடி துறை புதிய வாய்ப்புகளை பெற்றது. தற்போது புதிய இயல்பு வாழ்க்கைக்கு பிறகு மக்களின் தொழில் நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளது. அதனால் ஐடி துறையும் புதிய வாய்ப்புகளை நோக்கி நகர்ந்து வருகிறது.

அமெரிக்க தேர்தல் !

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு, அமெரிக்கா மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கி வந்தது. ஏற்கெனவே அமெரிக்காவில் விசா கட்டுப்பாடுகளுடன், இந்த ஆண்டு அதிபர் தேர்தலும் நடந்தது. அதனால் விசா கட்டுப்பாடுகள் குறித்த அரசியல் தீவிரமாக பேசப்பட்டன. இதனால் அமெரிக்காவுக்கு வெளிநாட்டு பணியாளர்கள் அதிக அளவில் செய்யவில்லை . தற்போது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க விசா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் இருக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. அநேகமாக 2021 தொடக்கத்திலேயே அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. இதையொட்டி ஐடி துறை வளர்ச்சி சாத்தியம் என நம்பலாம் என்கின்றனர்.

5 ஜி சேவை வளர்ச்சி!

2021 – புதிய வாய்ப்புகளை எதிர்நோக்கும்  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்!

இதுதவிர 2021 ஆம் ஆண்டில் 5ஜி சேவைத்துறை வேகமெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் 5ஜி சேவை வேகம் எடுக்கும் என்பதால் அதற்கான உபகரணங்கள், கருவிகள், தொழில்நுட்பங்கள் அதிக அளவில் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி சேவை தொழில்துறை நடவடிக்கைகளையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 5ஜி சேவையின் காரணமாக ஆட்டோமொபைல் துறை, தகவல் திரட்டு, செயற்கை நுண்ணறிவு, தொலைதூர செயல்பாடுகள் போன்றவை வேகம் எடுக்க உள்ளன. எனவே 2020 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறை பல சவால்களை சந்தித்ததுடன், இழப்புகளையும் சந்தித்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில் ஐடி நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளை நோக்கி நகர்வது வேகம் எடுக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.