2020 – ஓயாத ரயில் சக்கரங்கள் ஓய்வெடுத்த ஆண்டு!

 

2020 – ஓயாத ரயில் சக்கரங்கள் ஓய்வெடுத்த ஆண்டு!

அன்றாட வாழ்க்கையில், இவையெல்லாம் அத்தியாவசியம் என நாம் நினைத்தவற்றுக்கு எல்லாம் 2020 முற்றுப்புள்ளி வைத்தது என்றே சொல்லலாம். எவையெல்லாம் நடக்காது என நினைத்திருந்தோமோ அதையெல்லாம் நிகழ்த்திக் காட்டியது.

நமது வாழ்வில் அன்றாடம் கலந்து இருந்த பல சேவைகளில், தேவைகளில், அவை இல்லாமல் வாழ முடியும் என்கிற நம்பிக்கை அளித்தது 2020. அதே நேரத்தில் அந்த சேவைகள் இல்லாமல் நாம் இருந்திருக்கிறோமா என நினைக்கிறபோதே ஆச்சர்யம் ஏற்படும். அப்படியான ஆச்சர்யங்களில் ஒன்று ரயில் சேவை.

2020 – ஓயாத ரயில் சக்கரங்கள் ஓய்வெடுத்த ஆண்டு!

இந்தியாவில் ரயில் சேவையில் தேவை குறித்து சொல்லவே தேவையில்லை. உலக அளவில் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க் என்றால், அது இந்தியாவின் ரயில்கள்தான். இந்தியாவின் மிகப்பெரிய பரந்த நிலப்பரப்பை இணைப்பவை இந்திய ரயில்கள். நீண்ட தூர ரயில்கள், குறுகிற தூரம், புறநகர் மற்றும் மின்சார ரயில் சேவை என எல்லா இடத்திலும் ரயில் சேவை அத்தியவசியமாக இருந்தது.

டெல்லி, மும்பை,கொல்கொத்தா, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எத்தனை ரயில்கள் விட்டாலும், அத்தனையிலும் மக்கள் கூட்டம் தொங்கிக் கொண்டுதான் செல்லும். அப்படியான ஒரு சேவை 2020 ஆம் ஆண்டில் ஸ்தம்பித்து இருந்தது என்றால் நம்பத்தான் முடியவில்லை. ஆனால், கொரோனா ஊரடங்கு அதை உண்மையாக்கியது.

கொரோனா அலை பரவியதும், அரசு ஊரடங்கு அறிவித்தது. பின்னர் படிப்படியாக போக்குவரத்து சேவைகளை முடக்கியது. ரயில்களை பொறுத்தவரை மக்கள் முன்கூட்டியே பயணங்களுக்கு திட்டமிட்டிருந்தனர். அவர்களுக்கு முன்பதிவு கட்டணத்தை திரும்ப கொடுப்பதே பெரிய வேலையாக இருந்தது.

2020 – ஓயாத ரயில் சக்கரங்கள் ஓய்வெடுத்த ஆண்டு!

கொரோனா முடக்கம், ரயில் சேவைகள் ரத்து காரணமாக 2020 ஆம் ஆண்டில் கோடைக்கால சுற்றுலா கடும் இழப்புகளைக் கண்டன. அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என்பதால், மத்திய அரசு அதற்கான முயற்சிகளை எடுத்தது. மாநிலங்களிடையே புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. மக்களின் பொருள் சேவைகளை தடைபடாத வகையிலும் ரயில்கள் இயக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா அச்சம் குறையத் தொடங்கியதும், மெல்ல மெல்ல ஒவ்வொரு ரயில் சேவைகளை மத்திய அரசு அளித்து வருகிறது. எனினும் முழுமையான ரயில் சேவை இன்னமும் தொடங்கவில்லை. திட்டமிட்ட சில தடங்களில் மட்டுமே குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா அச்சம் காரணமாக மக்கள் போக்குவரத்தினை குறைத்துக் கொண்டதால், ரயில் சேவைகளை முழுமையாக இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. தற்போது மீண்டும் கொரோனா அலை உருவாக உள்ளதாக எச்சரிக்கை செய்யப்படுவதால் 2021 ஆம் ஆண்டு ரயில்வே துறைக்கு எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல முடியவில்லை.

இந்திய ரயில்வேயின் 167 கால வரலாற்று சக்கரம் 2020 ஆம் ஆண்டில் ஓய்வெடுத்தது என்றால் மிகையில்லை. 2021 ஆம் ஆண்டிலாவது மீண்டுவர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்!