மாற்றம் 2020: உருமாறியது கொரோனா மட்டுமல்ல உலகமும்!!

 

மாற்றம் 2020: உருமாறியது கொரோனா மட்டுமல்ல உலகமும்!!

உலகம் மட்டுமே சுற்றிக் கொண்டிருந்தது. இயற்கை மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. பேரிரைச்சலுடன் விமானங்கள் பறந்த வானில், பறவைகள் மட்டுமே அச்சமின்றி வட்டமடித்தன. கப்பல்கள், படகுகளின் இடையூறு இன்றி கடல்வாழ் உயிரினங்கள் புத்துணர்ச்சி பெற்றன. புகை நாற்றமும் இல்லை, ஹாரன் இரைச்சலும் இல்லை, சிறு பறவைகளின் கீச்சொலி சாலைகள் முழுவதும் பரவியிருந்தது. மக்களின் காலடி ஓசையின்றி வனவிலங்குகளும், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளும் சுதந்திரமாக நடைபோட்டன.
அதேசமயம், டிஜிட்டல் உலகத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த மனிதர்கள் சற்று ஆட்டம் கண்டுதான் போனார்கள். தொழில் துறை முடங்கிப் போனது, மருத்துவத் துறையும் சற்று அதிர்ந்து போனது, விஞ்ஞானிகளும் விழிப் பிதுங்கித் தான் போயிருந்தனர். பெறுவதற்கு ஒன்றுமே இல்லாத கையறு நிலையில், இருக்கும் உயிரை காப்பாற்றிக் கொள்வதே மனிதர்களுக்கு பெரும் சவாலாகிப் போக, அப்போதும் அவர்களுக்கு நம்பிக்கையூட்டியது என்னவோ இயற்கை தான். கொரோனாவுக்கு மருந்தே இல்லை என்ற ஒரு நிலையில், இயற்கையால் கிடைக்கும் மூலிகையும், இயற்கை உணவுமே மருந்தாக மாறிப் போயின.

மாற்றம் 2020: உருமாறியது கொரோனா மட்டுமல்ல உலகமும்!!

வேலையை தவிர மிச்சமிருக்கும் நேரங்களில் வாட்ஸ் அப், ஃபேஸ் புக் என சதா தலைக் குனிந்தபடி சமூக வலைதளத்திலேயே பேசிக் கொண்டிருந்தவர்கள், குடும்பத்தினருடன் நேரத்த செலவிட்டனர். கொரோனால் உடல்நலம் பாதிப்பு, பொது முடக்கத்தால் வேலையிழப்பு, வருமானமிழப்பு என தவித்த போதிலும் குடும்பத்தினருடன் ஒன்றாக பொழுதை கழித்ததே பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது. அதிலும், வீடியோ கேம்களை சற்று ஓரம்கட்டி வைத்துவிட்டு குடும்பத்துடன் தாயம், சீட்டுக்கட்டு விளையாடிய தருணமெல்லாம் கொரோனா கால மனநல மருந்தாக அமைந்தது.

விண்ணுக்கும் மண்ணுக்கும் தொடர்பை ஏற்படுத்தும் தொழில்நுட்பம் மட்டுமே 2020-ல் டிஜிட்டல் உலகம் எஞ்சியிருப்பதற்கு நம்பிக்கையூட்டியது. 4 சுவர்களுக்குள் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக நடைபெறும் சில தொழில்கள் மட்டுமே இயங்கின. வொர்க் ஃப்ரம் ஹோம், ப்ரி கேஜி முதல் கல்லூரி வரை நடத்தப்பட்ட ஆன்லைன் வகுப்புகளும் எதிர்கால நம்பிக்கைக்கு வித்திட்டன.

ஆளில்லா மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகளும், ஓடிடி முறையில் புதிய திரைபடங்களும் வெளியாகின. அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே கட்டுப்பாடுகளுடன் இயங்கின. வேலையிழந்தவர்களுக்கு மளிகைப் பொருட்களை கடனாக அளித்து கைகொடுத்ததில் பல அண்ணாச்சி கடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. வாடகை தள்ளுபடி, உணவுப் பொருட்கள், உதவித் தொகைகளை வழங்கி மனிதம் மீண்டும் நம்பிக்கை அளித்தது.

மாற்றம் 2020: உருமாறியது கொரோனா மட்டுமல்ல உலகமும்!!

சுமார் 8 மாதங்களாக கொரோனா தாக்கம், பொதுமுடக்கத்தால் செய்வதறியாது தவித்த மக்களுக்கு உலக நாடுகளின் கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிகள் சற்று நம்பிக்கையூட்டின. நாட்டில் …. உயிர்களை பறிகொடுத்த போதிலும், கொரோனாவை வென்று வீடு திரும்பிய … பேர் அனைவருக்குமான நம்பிக்கையாக இருந்தனர். படிப்படியாக பாதிப்புகள் குறைந்து, பல கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தேய்ந்து ஓய்ந்து கிடந்த பேருந்து, ரயில்களின் சக்கரங்கள் மீண்டும் சுழலத் தொடங்கின. விமானங்கள் மீண்டும் பறக்கத் தொடங்கின.

கடைகளும், தொழில் நிறுவனங்களும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பின. பூங்காக்கள், திரையரங்குகள், சுற்றுலா தலங்கள், கடற்கரைகளும் படிப்படியாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தன. கண்ணுக்குத் தெரியாத கொரோனா கிருமியால் பூட்டப்பட்டு கிடந்த வழிபாட்டு தலங்களும் தரிசனத்திற்காக திறந்துவிடப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டன.

ஒருகட்டத்தில் கொரோனாவை எதிர்கொள்ள துணிந்த மக்கள், ஆண்டு இறுதி நெருங்க நெருங்க அதனுடன் வாழப் பழகிக் கொண்டனர். ஆம். நாடு முழுவதும் நியூ நார்மல் எனப்படும் புதிய வார்த்தையை 2020-ம் ஆண்டும், கொரோனாவும் நமக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டது. அதாவது மாஸ்க் அணிந்து வெளியே செல்வது, சானிடைசர் பயன்படுத்துவது, கூட்டம் சேராமல் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை அன்றாட வழக்கமாகிப் போயின. அனைத்து வீடுகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகள், மால்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்களின் வரவேற்பு அறைகளில் சானிடைசருக்கு பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுவிட்டது.

பல இடங்களில் சோப் தேய்த்து கை கழுவும் வசதியும் செய்யப்பட்டு விட்டது. இந்த நியூ நார்மல் நிலை புதிய 2021ஆம் ஆண்டில் நார்மலாக மாறும் என எதிர்பார்த்திருந்த வேளையில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒருவேளை அந்த வைரஸ் இந்தியாவுக்குள் புகுந்தாலும் கொரோனா அளித்த பாடமும், அனுபவமும் உருமாறிய கொரோனாவையும் வென்றெடுக்க உதவும் என்ற நம்பிக்கையில் 2021ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைப்போம்.