வழக்கமான கொண்ட்டாட்டத்துடன் தொடங்கி தடம் புரண்ட 2020

 

வழக்கமான கொண்ட்டாட்டத்துடன் தொடங்கி தடம் புரண்ட 2020

ட்வென்டி 20 என பெயருக்கேற்றார்போல அதிரடி மற்றும் விறுவிறுப்பான மாற்றங்களை எதிர்பார்த்த மக்களுக்கு, வாழ்வின் சகலத்தையும் அணை போட்டுத் தடுத்தது கொரோனா பொதுமுடக்கம். வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும் என அரசே உத்தவிட, இதுவரை அறிந்திடாத ஒரு விஷயத்தால் வெறுத்துப் போயினர் தமிழக மக்கள். புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, குடியரசுத் தினம் என வழக்கமான கொண்டாட்டங்களுடன்தான் 2020ஆம் ஆண்டின் முதல் மாதம் தொடங்கியது. பிப்ரவரியும் பெரிய மாற்றமின்றி கடந்தது. அதன் பின்னர், கொரோனா எனும் நோய்த் தொற்று பரவலால், மறக்க முடியாத மாதமாக ஒவ்வொருவரின் வாழ்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது மார்ச் மாதம். சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த முதல் நபர் மார்ச் 7ஆம் தேதி பாதிக்கப்பட்டார். ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதிப்பு படிப்படியாக அதிகரித்தது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மார்ச் 24 ஆம் தேதி நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் முன்னோட்டமாக மார்ச் 22 ஆம் தேதி ஒரு நாள் பொது முடக்கமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சகல போக்குவரத்துகளும் நிறுத்தம், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் நாடே ஸ்தம்பித்தது. காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டும் நேரக்கட்டுப்பாடுகடள் செயல்பட்டன. ஏப்ரல், மே என பொதுமுடக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்பட, வேலையிழப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். வழக்கமான கொண்ட்டாட்டத்துடன் தொடங்கி தடம் புரண்ட 2020 தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததாலும், வேலை இல்லாததாலும், இங்கிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்களது சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்தனர். சென்னையில் வசித்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், தலைநகரிலிருந்து சாரைசாரையாக கிளம்பிச் சென்றதை காண முடிந்தது. வெளியூர்களுக்குச் செல்ல இபாஸ் கட்டாயம் என கட்டுப்பாடுகள் கடுமையாக்கியது அரசு. 500 ரூபாயில் ஊருக்கு சென்றவர்கள், 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் வரை செலவிட நேரிட்டது. சென்னை – கோயம்பேடு சந்தையில் இருந்து வேகமாக அண்டை மாவட்டங்களும் தொற்று பரவியது. இதனால் கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, தற்காலிகமாக மாற்று இடங்களில் செயல்பட்டது. கோடையில் 2 மாதங்கள் பள்ளி விடுமுறை விடப்படும் நிலையில், கொரோனா தாக்கத்தால் ஆண்டின் இறுதிவரை வகுப்பறைகளுக்கு மாணவர்கள் செல்லாத நிலை ஏற்பட்டது. வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் கல்வி கற்கும் நிலை உருவானது. இடையில் பள்ளிகளை திறக்கலாம் என எடுத்த முடிவையும் திரும்பப் பெற்றது தமிழக அரசு. சுற்றுலா, சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டாலும், ஐ.டி. துறையினர் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதி இருந்ததால், அவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்றே சொல்லலாம். தொற்று பாதிப்பு தொடர்ந்தபோதிலும், பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில்கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டு, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியது தமிழகம்.