2019 ரீவைண்ட் : தமிழகத்தை உலுக்கிய சோக சம்பவங்களும் ஆறாத வடுக்களும்…!

 

2019 ரீவைண்ட் : தமிழகத்தை உலுக்கிய சோக சம்பவங்களும் ஆறாத வடுக்களும்…!

குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆவணங்கள்  தெளிவில்லாமல் உள்ளது என்றும் இது தொடர்பாக ஆவணங்களைச் சம்மந்தப்பட்டவர்களின்  உறவினர்களுக்கு அளிக்கவில்லை

2019 ஆம் ஆண்டு முடிந்து அப்துல்கலாம் இந்தியா வல்லரசு நாடாக  மாறும் என்று கூறிய 2020 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன.  இந்தாண்டு மனதில் மகிழ்ச்சியை அளிக்கும்படியான பல நிகழ்வுகள் நடந்தாலும், நம்மால் மறக்கவே முடியாத அளவுக்கு சில துயர சம்பவங்களுக்கும் அரங்கேறின.  அவை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

பொள்ளாச்சி கொடூரமும் குண்டாஸும்…!

ttn

பொள்ளாச்சியில்  பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே குலைநடுக்க வைத்தது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம்  இருந்தன.   இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட  திருநாவுக்கரசு, சபரி ராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருநாவுக்கரசு தாய் பரிமளா, சபரிராஜன் தாய் லதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆவணங்கள்  தெளிவில்லாமல் உள்ளது என்றும் இது தொடர்பாக ஆவணங்களைச் சம்மந்தப்பட்டவர்களின்  உறவினர்களுக்கு அளிக்கவில்லை என்று கூறி  திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரின் மீதான  குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டு  தமிழக மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆழ்துளை கிணற்றில் சுஜித்தின் கடைசி நிமிடங்கள்…!

ttn

தீபாவளி கொண்டாட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த தமிழகத்திற்கு இந்த வருட தீபாவளி மீளா  துயரை தந்துவிட்டுப் போனது. அதற்கு காரணம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுக்காட்டுப்பட்டியில்  சுஜித் என்ற 2 வயது குழந்தை தனது வீட்டின் தோட்டத்திலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான் என்ற செய்தியே… அக்டோபர் கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த அந்த குழந்தையை மீட்க 80 மணிநேரத்தையும்  கடந்து மீட்பு படையினர் முயற்சி செய்தனர். இருப்பினும் நான்கு நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு துரதிர்ஷ்டவசமாக  சுஜித் உயிரிழந்தான்.  கொஞ்சமும் நியாயமில்லாத இந்த மரணத்தின் மூலம் சுஜித் என்ற குழந்தை விழிப்புணர்வின் விதையானான் என்பது மறக்க முடியாத சோகம்.

பாத்திமா மரணமும் …தமிழகத்திற்குத் தலைகுனிவும்…!

ttn

கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை ஐஐடி.யில் முதுநிலை முதலாமாண்டு படித்து வந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி விடுதியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாத்திமா லத்தீப் தனது மொபைலில் தற்கொலைக்கு ஐஐடியில் இணைபேராசியராக பணியாற்றும் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம்  அவர் தன்னை மனரீதியாக துன்புறுத்தினார் என்று குறிப்பிட்டிருந்தார். பாத்திமா செல்போனை ஆய்வு செய்த சைபர் கிரைம் பிரிவினர்,  பாத்திமாவின் தற்கொலைக் குறிப்பு மற்றும் செல்போன் பதிவுகள் போலியானது அல்ல என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 5 மாணவர்கள் அந்த கல்லூரியில் தற்கொலை   செய்து கொண்டுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. மகளை நினைத்து கதறிய பாத்திமாவின் தாய், தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பி அனுப்பினேனே  என்று கூறியது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தியது என்பது வெட்கக்கேடு.

சுபஸ்ரீயின் உயிரை காவு வாங்கிய ஆளுங்கட்சியின் பேனர்…!

ttn

கடந்த மாதம் 13 ஆம் தேதி  சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் நிலைதடுமாறி விழுந்தார். அப்போது  அவருக்குப்  பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவம் அங்கிருந்தவர்களைப் பதைபதைக்கச் செய்தது. இந்த விவகாரத்திற்குப் பிறகு திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளும், நடிகர்களும்   எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர். இதை தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னையில் மட்டும் சுமார் 3,964 பேனர்கள் அகற்றப்பட்டன.

இருப்பினும் கோவை பெண் அனுராதா மீது அ.தி.மு.க பிரமுகர் வைத்திருந்த பேனரின் கம்பம் சரிந்து விழுந்ததில் அவரின் கால்கள் பறிபோனது. இவ்வாறு பேனர் கலாச்சாரம் தமிழகத்தில் வேரூன்றி போயுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.

தண்ணீர் பஞ்சமும் திருடர்களாக மாறிய  மக்களும்…!

ttn

கடந்த 2018-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால்  நிலத்தடி நீர் குறைந்து சென்னை மற்றும் தமிழகத்தின் மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மக்கள் குடங்களுடன் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதில்   சென்னை மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் மெட்ரோ நிறுவனத்தால் 50 கோடி லிட்டர் மட்டுமே விநியோகிக்க முடிந்தது. இதனால் ஒரு சில இடங்களில் மக்கள்  இரவு நேரங்களில் ஆட்டோக்களில் சென்று நீரை திருடும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்தாண்டு பெய்துள்ள மழையால்,  நிலத்தடி நீர் மட்டம்  4 முதல் 5 மீட்டர் வரை உயர்ந்துள்ளது என்றாலும் சென்னைக்கு நீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம், புழல், பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகளில் இன்னும் நீர் இருப்பு 50 விழுக்காடுக்கும் குறைவாகவே உள்ளது. வரும் கோடைக் காலத்தில் எஞ்சியுள்ள நிலத்தடி நீர்மட்டமும் குறைய கூடும் என்பதால்  2020 கோடைக் காலத்திலும் சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், வீராணம் ஏரி, கிணறுகள் மூலம் தண்ணீர் பஞ்சத்தைத் தடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து  பார்க்கலாம்.

ttn

நீட் தேர்வு காரணமாக மரணித்த அனிதா மரணமே  கடைசி என்று நினைத்திருந்த நிலையில்,  பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைசியா, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நிதுஸ்ரீ, பெரம்பலூரைச் சேர்ந்த கீர்த்தனா, நெல்லையைச் சேர்ந்த தனலட்சுமி என மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.  இது  தவிர மலக்குழியில் இறங்கி உயிரை விட்ட அப்பாவிகள், மருத்துவ துறையின் தவறால்  நடந்த மரணங்கள், டெங்கு  காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பரிதாபம் என இந்தாண்டு  தமிழக மக்களுக்கு ஆறாத வடுக்களை உண்டாக்கிச் சென்றது.