2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தல்; உலகின் காஸ்ட்லியான தேர்தல்!

 

2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தல்; உலகின் காஸ்ட்லியான தேர்தல்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான செலவு குறித்த தகவலை ஊடக ஆய்வுகளுக்கான மையம் கணித்து வெளியிட்டுள்ளது

புதுதில்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான செலவு குறித்த தகவலை ஊடக ஆய்வுகளுக்கான மையம் கணித்து வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு முனைப்புடன் செய்து வருகிறது. தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை ஆகியவற்றை செய்து வருகிறது.

vote

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான செலவு குறித்த தகவலை ஊடக ஆய்வுகளுக்கான மையம் (Centre for Media Studies) கணித்து வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்னெப்போதும் இல்லாத வகையில், எதிர்வரவுள்ள தேர்தலுக்கான செலவு சுமார் ரூ.500 பில்லியன் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. களஆய்வுகள், அரசு தரவுகள், ஒப்பந்தங்கள் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் மொத்த செலவு 5 பில்லியன் டாலராகும். ஆனால், அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல் ஆகிய இரண்டிற்குமான செலவு 6.5 பில்லியன் டாலர்தான். எனவே, வரவுள்ள மக்களவை தேர்தல் தான் உலகத்தில் நடைபெறும் அதிக செலவுமிக்க தேர்தல் ஆகும்.

bjp

சமூக ஊடகங்கள், பயணம், விளம்பரம் உள்ளிட்டவற்றிற்கு தான் அதிக செலவாவதாக, சி.எம்.எஸ். அமைப்பின் தலைவர் என்.பாஸ்கரராவ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சமூக ஊடகங்களுக்கான செலவு மட்டும் ரூ.50 பில்லியன் வரை ஆகும் என தெரிவித்துள்ள அவர், கடந்த தேர்தலின் போது இது ரூ.2.5 பில்லியனாக இருந்தது எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், வேட்பாளர்கள் மற்றும் கட்சி பணியாளர்களின் போக்குவரத்து செலவுகளும் அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

rahulgandhi

பொதுக் கூட்டங்களுக்கு அதிக கூட்டத்தை கூட்டுவதற்காக தரப்படம் பிரியாணி பொட்டலங்கள், நாற்காலிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு வாகனங்கள் உள்ளிட்டவைகளாலும், வாக்காளர்களை குழப்பி, வாக்குகளை பிரிப்பதற்காக வேட்பாளர் ஒருவரது பெயரிலேயே நிறுத்தப்படும் டம்மி வேட்பாளர்களுக்கு செலவு செய்யப்படும் தொகையாலும் தேர்தல் செலவு அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.