2019 நாடாளுமன்ற தேர்தல்; ராகுலுக்கு ஆலோசனை சொல்ல வருகிறார் ஸ்டீவ் ஜார்டிங்

 

2019 நாடாளுமன்ற தேர்தல்; ராகுலுக்கு ஆலோசனை சொல்ல வருகிறார் ஸ்டீவ் ஜார்டிங்

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனைகளை வழங்க அமெரிக்காவை சேர்ந்த தேர்தல் நிபுணர் ஸ்டீவ் ஜார்டிங் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், சொகுசு பேருந்தை பிரசார வாகனமாக்கி, அந்த பேருந்தின் கூரை மீது கைகள் கோர்த்தபடி, பிரமாண்டமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர் ராகுலும், அகிலேஷும். ஆனால், அதற்கு அடுத்த இரண்டு மாதத்தில் வெளியான தேர்தல் முடிவுகள், அவர்களது தேர்தல் யுத்திகளால் அம்மாநில மக்கள் கவரப்படவில்லை என்பதை காட்டியது. சமாஜ்வாதி கட்சி 47 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 7 இடங்களையும் கைப்பற்று படு தோல்வியடைந்தது. 312 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக அங்கு ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கட்சியை காட்டிலும் சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் யுத்திகளே தோல்வியடைந்ததாக அப்போது விமர்சிக்கப்பட்டது.

அந்த தேர்தலில் தேர்தல் வியூகங்களை வகுக்க தேர்தல் நிபுணர் ஸ்டீவ் ஜார்டிங் என்பவரை அகிலேஷ் யாதவ் நியமித்திருந்தார். உத்தரப்பிரதேச தேர்தல் சமயத்தில் முலாயம் சிங் யாதவிற்கும், அகிலேஷ் யாதவிற்கும் இடையே கட்சியை கைபற்ற நடைபெற்ற குடும்ப சண்டை கூட திட்டமிட்ட ஒன்று தான் என கூறப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக ஸ்டீவ் ஜார்டிங் பெயரில் வந்த மெயில் பரபரப்பை கிளப்பியது. ஆனால், அது போலியான மெயில் என பின்னர் விளக்கமளிக்கப்பட்டது. அதேபோல், கிராமங்கள் மீது அதிகளவு கவனம் செலுத்த அகிலேஷ் யாதவிற்கு ஜார்டிங் அறிவுரை கூறியுள்ளார். ஆனால், அந்த யுக்தி செய்திதாள்களில் பாராட்டுகளை பெற்றதே தவிர தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கவில்லை.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசனைகளை வழங்க அமெரிக்காவை சேர்ந்த தேர்தல் நிபுணர் ஸ்டீவ் ஜார்டிங்கை அக்கட்சியின் தலைவர் ராகுல் நியமனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஸ்டீவ் ஜார்டிங், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். குறிப்பாக, தேர்தல் உத்திகளை உருவாக்குவதில் நிபுணர். பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகளுக்காக இவர் பணியாற்றியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் எப்படியேனும் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கி விட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல், ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு பாஜகவும் தீவிரமாக களப் பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.