உண்மையை மூடி மறைத்து விட்டு காங்கிரஸ் மீது பழி போடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். உண்மையை யாராலும் மறைக்க முடியாது என்று பாஜக, அதிமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டை காண ராகுல்காந்தி இன்று மதுரை வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது. அதனால், ராகுல்காந்தி எப்படி ஜல்லிகட்டுக்கு வரலாம் என்று எதிர்ப்புகள் எழுந்துள்ளதால் அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும், ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, அந்த விளையாட்டில் பங்கேற்க என்ன உரிமை இருக்கிறது? என்ற அர்த்தமற்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2004 முதல் 2014 வரை பத்து ஆண்டு காலத்தில் தமிழகத்தில் எந்த தடையும் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடந்து வந்தது. இதை யாராலும் மறுக்க முடியுமா? என்று கேட்கிறார்.
மதுரை நீதிமன்றத்தினால் 2006ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட தடையை மேல்முறையீடு செய்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதேபோன்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் 2009ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற அன்றைய திமுக ஆட்சியில் சட்டப் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வென்ற மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் ஆதரவோடு தான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதை யாராலும் மறுக்க முடியாது என்கிறார்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 11. 7. 2011 ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தடையாக இருந்ததாக கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க செயல். இந்த அறிக்கைக்குப் பிறகு 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மதுரை உயர் நீதிமன்ற ஆணையின் பேரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்ததை பாஜகவினர் மூடிமறைத்து பேசுகிறார்கள். இதையும் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் பாஜக ஆட்சி அமைந்தவுடன் 2015, 2016 ஆம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்கு பாஜக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.
2014 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகு அதை நீக்குவதற்கு பாஜக அரசு உருப்படியான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினால் தான் தொடர்ந்து மூன்றாண்டுகள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத அவல நிலை உண்டானது. ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபதாம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மிருகவதை தடுப்பு சட்ட பிரிவுகளின் அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடையை வழங்கியதை நினைவுபடுத்த நினைக்கிறேன்.

இதை கருத்தில் கொண்டுதான் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தால் மட்டுமே உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்கொண்டு 2015 2016 ஜல்லிக்கட்டு நடத்தியிருக்க முடியும் அதற்கு மாறாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சாதாரண துறை சார்ந்த அறிக்கை மூலம் எதிர் கொண்டதால் அதை உச்சநீதிமன்றம் தடை செய்து விட்டது. இது தமிழக பாஜகவை திருப்திப்படுத்துவதற்காக கபட நாடகம் ஆடிய மத்திய பாஜக அரசு என்பதை எல்லோரும் அறிவார்கள் என்கிறார்.
உச்சநீதிமன்றம் தடைவிதித்து முப்பத்தி இரண்டு மாதங்கள் ஆன பிறகும் அதை செயலிழக்க செய்ய மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று அன்றைய பாஜக அரசு மனப்பூர்வமாக நினைத்திருந்தால் நாடாளுமன்றத்தில் மிருகவதை தடுப்பு சட்டத்தின் திருத்தம் கொண்டு வந்திருக்க முடியும். இல்லையென்றால் எதற்கெடுத்தாலும் அவசர சட்டம் இயற்ற பாஜக அரசு தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றுள்ள ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கலாம் இதை ஏன் பாஜக அரசு செய்யவில்லை?என்று கேட்கிறார்.

நாடாளுமன்றத்தில் அன்றைக்கு ஐம்பது உறுப்பினர்களை கொண்டிருந்த அதிமுக ஜல்லிக்கட்டுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்க வில்லையே ஏன்? இந்தப் போக்கினை எதிர்த்து தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 8. 1. 2017 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 15 நாட்கள் சென்னை மெரினாவில் இரவு, பகலாக 20 லட்சம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். இதற்குப் பிறகும் மத்திய பாஜக அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் கொண்டுவர மறுத்துவிட்டது. மெரினா புரட்சியை எதிர்கொள்ள முடியாத அதிமுக இறுதியாக அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது என்கிறார் அழகிரி.
மேலும், தமிழ் மக்களுக்கும் பண்பாட்டு கலாச்சாரத்திற்கும் எதிராக செயல்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த முட்டுக்கட்டை போட்டு அதை மூடி மறைத்து விட்டு காங்கிரஸ் மீது பழி போடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது என்று எச்சரித்துவிட்டு, உண்மையை யாராலும் மறைக்க முடியாது என்கிறார் உறுதியாக.