திமுகவுக்கு அதிக தொகுதி – உதயநிதி கருத்தால் திரிசங்கு நிலையில் கூட்டணி கட்சிகள்!

 

திமுகவுக்கு அதிக தொகுதி –  உதயநிதி கருத்தால் திரிசங்கு நிலையில் கூட்டணி கட்சிகள்!

திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்கிற கருத்தை உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது மீண்டும் இந்த கருத்தினை வலியுறுத்தி உள்ளார். இது திமுக கூட்டணி கட்சிகளிடம் அதிருப்தியையும் கலக்கத்தையும் ஒரே சேர உருவாக்கியுள்ளதாம். இந்த சலசலப்பு திமுகவிலேயே உருவாகியுள்ளதாம்.

இது தொடர்பாக அந்த கூட்டணி கட்சி வட்டாரத்தில் பேசியபோது, உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே இது தொடர்பாக, தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். ஆனால் திமுகவின் மூத்த தலைவர்கள் இந்த விஷயத்தில் நேரடியாக கருத்து சொல்லவில்லை. கூட்டணி கட்சிகளை எப்படி கையாள்வது என்பதில் திமுகவுக்கு நல்ல அனுபவம் உள்ளது. ஆனால் , இந்த முறை உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தில் அழுத்தமாக உள்ளார். கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குவதால், பெரும்பான்மை பலம் திமுகவுக்கு கிடைக்காமல் போகலாம் என இளைஞர் அணியினர் கருத்து தெரிவித்ததாக உதயநிதி குறிப்பிடுகிறார்.

திமுகவுக்கு அதிக தொகுதி –  உதயநிதி கருத்தால் திரிசங்கு நிலையில் கூட்டணி கட்சிகள்!

உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் ஒரு சுற்று பிரச்சாரம் செய்து முடித்துள்ளார். அந்தந்த மாவட்டங்களில், பகுதிகளில் மூத்த நிர்வாகிகள் தவிர, இளைஞர் அணியினரையும் சந்தித்து கருத்துக்களை ஆலோசனைகளை கேட்டு வருகிறார். அப்படி கேட்கப்பட்ட ஆலோசனைகளில், தலைமைக்கு தெரியப்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாகத்தான், கட்சிக்குள் புதிய ரத்தம் பாய்ச்சம் வேண்டும் என்றால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

மூத்த நிர்வாகிகளுக்கு இணையாக , புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிற கருத்துகள் அவர் முன்வைத்துள்ளார். இதன்மூலம் சாமானியர்களும் திமுகவில் பொறுப்புக்கு வரமுடியும் என்கிற பிரச்சாரத்தை கொண்டு செல்ல முடியும் என வலியுறுத்தி உள்ளார். ஆனால், இதுதொடர்பாக ஏற்கெனவே தந்தைக்கும் மகனுக்கும் முரண்பாடு ஏற்பட்டு பேசிக்கொள்ளவில்லை என்கிற தகவல்களும் கூறப்பட்டன. இந்த நிலையில், திமுகவின் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளைக் கேட்டு நெருக்கி வருகின்றன.

திமுகவுக்கு அதிக தொகுதி –  உதயநிதி கருத்தால் திரிசங்கு நிலையில் கூட்டணி கட்சிகள்!

இதற்கு திமுக எடுத்துள்ள அஸ்திரம், காங்கிரஸ் தவிர, இதர கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதுதான். ஆனால், இதற்கு, கூட்டணி கட்சிகளிடமிருந்து இதுவரை இசைவு கிடைக்கவில்லை . இந்த நிலையில்தான் உதயநிதி, கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கக் கூடாது என்கிற அர்த்தத்தில் பேசியுள்ளார். இது கூட்டணிக் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

ஏற்கனவே சொந்த சின்னத்தில் போட்டியிட முடியாத நெருக்கடியை திமுக அளித்து வரும் நிலையில், அதிக தொகுதியில் போட்டியிட முடியாத நிலையும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சின்னத்தை மறுக்க முடியாது என்றாலும், கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதியை மட்டுமே ஒதுக்குவதற்கு திமுகவுக்கு மனம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த விஷயம் உதயநிதியின் மூலம் கூட்டணி கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கைதான்.

ஏற்கனவே திமுக 170 தொகுதிகளில் போட்டியிடுவது என்கிற அரசல்புரசலாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது உதயநிதியின் பேச்சும் அதற்கு வலு சேர்த்துள்ளது. மூத்த நிர்வாகிகளும் 170 என்கிற எண்ணிக்கையில் தெளிவாக உள்ளனர். திமுக கூட்டணி கட்சிகளின் நிலைதான் திரிசங்காக உள்ளது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.