கொரோனா தடுப்பூசி பெயரில் புதிய வரி விதிப்பா ?

 

கொரோனா தடுப்பூசி பெயரில் புதிய வரி விதிப்பா ?

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு நிதிப்பற்றாக்குறையில் உள்ள நிலையில், நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசி போடுவதன் மூலம், அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை அதிகரிக்க உள்ளது. இதையடுத்து வருவாயை பெருக்க வேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக புதிய வரிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தடுப்பூசி பெயரில் புதிய வரி விதிப்பா ?

மத்திய பட்ஜெட்டில், ஒவ்வொரு ஆண்டும் நிதிச்சுமை அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், புதிய வரி விதிப்பு குறித்து பேச்சு எழுந்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு தடுப்பூசி வரி என்கிற பெயரில் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக, நிதியமைச்சக அதிகாரிகள் கூறுகையில், தடுப்பூசிக்கான சிறப்பு வரியை, வருகிற பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். இந்தியா முழுவதும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டுமென்றால் சுமார் 60,000 கோடி ரூபாய் வர மத்திய அரசுக்கு கூடுதலாக செலவாகும். முதல் கட்டமாக ஒரு கோடியே 10 லட்சம் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்பந்தம் அளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பெயரில் புதிய வரி விதிப்பா ?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் வரி வருவாய் குறைந்த நிலையில், வருமான வரிச் சலுகைகளை உயர்த்த வேண்டாம் என்கிற ஆலோசனைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு அளித்துள்ளனர். மக்கள் வேலையிழப்பு, ஊதிய இழப்புகள் போன்றவற்றில் இருந்து மீண்டு வராத நிலையில், வருமான வரிச் சலுகைகளை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஆலோசித்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து தற்போது வரிச் சலுகை அளிக்க பொருத்தமான நேரம் அல்ல என்கிற ஆலோசனை அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தி வருகிறது. நேரடி மானியங்கள் அளிப்பதை குறைப்பதற்கும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்புக்கான சிறப்பு வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த வரி 1 முதல் 2 சதவீதம் வரை இந்த இருக்கலாம் என்றும், இந்த வரிவிதிப்பு, மறைமுக வரியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மறைமுக வரிவிதிப்பின் மூலம், மக்களுக்கு நேரடியாக சுமை ஏற்படாது என்றும், நிறுவனங்களுக்கு பெரிய சுமையாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

சொகுசுப் பொருட்கள், புகையிலைப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களின் மீது இந்த வரி விதிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.