20 வருடங்களில் முதல் முறையாக மன்னிப்பு கேட்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

 

20 வருடங்களில் முதல் முறையாக மன்னிப்பு கேட்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

லண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆன்லைன் சேவையில் வாடிக்கையாளர்களின் தகவல் திருடப்பட்ட விவகாரத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மன்னிப்பு கோரியுள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இந்த மாதம் 5-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயன்படுத்திய சுமார் 3.8 லட்சம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 20 வருடங்களாக இணைய சேவை வழங்கி வரும் வேளையில் இதுவரை இது போன்று நடந்ததே இல்லை என பிரிட்டிஷ் ஏர்வேஸ் தலைமை நிர்வாகியான அலெக்ஸ் க்ரூஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியிருக்கிறது. ஹேக்கர்கள் விமான நிறுவனத்தின் என்க்ரிப்ஷனை முறியடிக்கவில்லை என்றாலும் வாடிக்கையாளர்களின் விவரங்கள் எவ்வாறு அபகரிக்கப்பட்டன என்பது குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. தகவல்களை திருட ஹேக்கர்கள் மிகவும் கடினமான வழிமுறையை பின்பற்றியிருப்பதாக க்ரூஸ் தெரிவித்தார்.

மேலும், தகவல் திருட்டைத் தொடர்ந்து பணத்தை பறிக்கொடுத்த பயனர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தேசிய சைபர் க்ரைம் யூனிட், மற்றும் தேசிய குற்ற ஆணையம் ஆகியவை ஹேக்கிங் விவகாரம் சார்ந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளன.