20 நாளில் ரூ.3 லட்சம் கோடி தேவை…. நேரடி வரி வசூல் இலக்கை எட்ட….. மத்திய அரசு தகவல்

 

20 நாளில் ரூ.3 லட்சம் கோடி தேவை…. நேரடி வரி வசூல் இலக்கை எட்ட….. மத்திய அரசு தகவல்

இந்த நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் இலக்கை எட்ட வேண்டுமானால் 20 நாட்களில் ரூ.3.06 லட்சம் கோடி தேவை என மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்தார்.

இந்த நிதியாண்டில் நேரடி வரிகள் வாயிலாக ரூ.11.70 லட்சம் கோடியும், மறைமுக வரிகள் வாயிலகா ரூ.9.86 லட்சம் கோடியும் திரட்ட மத்திய அரசு இலக்கு (மறுமதிப்பீடு)  நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரி வசூல் நிலவரம் எதிர்பார்த்த மாதிரி இல்லை என தெரிகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் வரிகள் வசூல் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியிருப்பதாவது:

அனுராக் சிங் தாகூர்

கடந்த 10ம் தேதி நிலவரப்படி, நேரடி வரிகள் வாயிலாக ரூ.8.63 லட்சம் கோடியும், மறைமுக வரிகள் வாயிலாக ரூ.8.75 லட்சம் கோடியும் வசூலாகியுள்ளது. இதன்படி மார்ச் 31ம் தேதிக்குள், இந்த நிதியாண்டுக்கு நேரடி வரி வசூல் இலக்கை எட்ட ரூ.3.06 லட்சம் கோடியும், மறைமுக வரி வசூல் இலக்கை எட்ட ரூ.1.11 லட்சம் கோடியும் தேவை. நேரடி வரிகள் பொறுத்தவரை, முன்கூட்டிய வரியின் இறுதி தவணை இந்த மாதத்தில் வரும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி.

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும். ஜி.எஸ்.டி., கலால் வரி போன்றவை மறைமுக வரிகளாகும். மறைமுக வரி அரசால் ஒருவர் மீது விதிக்கப்பட்டாலும் அதனை தாங்குபவர் வேறு ஒருவராக இருப்பார். அதேசமயம் நேரடி வரிகளை மற்றவர் மீது சுமத்த முடியாது.