20 அடிக்கு முன்னே இடிந்துவிழும் சுவர், ஆர்ப்பரிக்கும் மாணவர்கள்

 

20 அடிக்கு முன்னே இடிந்துவிழும் சுவர், ஆர்ப்பரிக்கும் மாணவர்கள்

மாவட்ட நிர்வாகம் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, விடுதியில் இருப்பவர்களை ஊருக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

வரலாறு காணாத அளவில் கோவையில் மழை பெய்யவிருக்கிறது என வானிலை தன்னார்வலர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்திருந்தார். “இது எங்க போய் முடிய போகுதோ” என்றுதான் எச்சரிக்கையையே ஆரம்பித்திருந்தார். ஆனாலும் மாவட்ட நிர்வாகம் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, விடுதியில் இருப்பவர்களை ஊருக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன?

Cheran College hostel

பேரூரில் செயல்பட்டு வரும் சேரன் கல்லூரியின் விடுதியின் சுற்றுச்சுவரை ஒட்டி வெள்ளநீர் மூன்று நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனியார் கல்லூரி என்பதால், மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. விசாரித்தால்தான் தெரியவரும். தொடர்ந்து ஈரப்பதமாக இருந்ததால், மாணவர்கள் கண்முன்னால் சுற்றுச்சுவர் மொத்தமும் இடிந்து விழுந்துவிட்டது. இருபதடி தூரத்தில் கட்டப்பட்டிருந்த மூன்று மாடி விடுதியில் இருந்த மாணவர்கள் பெருத்த ஆரவாரத்தோடு அதனை வரவேற்றார்கள்(!!!). இன்னும் இருபதடி தூரம் வெள்ளம் உள்ளே வந்தால் என்னாவது? மாணவர்களை முன்கூட்டியே ஊருக்கு அனுப்பியிருக்க வேண்டாமா? அது சரி, கண்கெட்ட பின்னாடி சூரிய வணக்கம் நமக்கு புதுசா என்ன?