தினமும் 2 பழம், 3 காய்கறியை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வாழலாமாம்!

 

தினமும் 2 பழம், 3 காய்கறியை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வாழலாமாம்!

நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை. ஆனால், அதற்கு ஏற்ப வாழ்வியல் மாற்றங்களைச் செய்ய யாருக்கும் விருப்பம் இல்லை. தினமும் மூன்று காய்கறிகள், இரண்டு பழங்களை சேர்த்து வந்தால் ஆயுள் கூடும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

காய்கறிகள், பழங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று யாராவது சொல்லித்தான் தெரிய வேண்டிய அளவில் யாரும் இல்லை. எல்லோருக்குமே காய்கறிகள், பழங்கள் ஊட்டச்சத்து மிக்கவை, நம்மை ஆரோக்கியமாக வாழ வைக்கக் கூடியவை என்று நன்கு தெரியும். இருப்பினும் அதை பெரிய அளவில் சேர்த்துக்கொள்வது இல்லை. தினமும் கூட்டு, பொரியல், குழம்பில் சேர்த்துக்கொள்கிறோமோ என்று கூறலாம். இப்படி வேகவைத்த, வதக்கிய, எண்ணெய் விட்டு பொரித்த காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் சிதைந்துவிடுகின்றன.

தினமும் 2 பழம், 3 காய்கறியை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வாழலாமாம்!

இதற்கு பதில் தினமும் மூன்று காய்கறியை சாலட் வடிவில் எடுத்துக்கொள்வதும் இரண்டு வகையான பழங்களை நன்கு கடித்து மென்று சாப்பிடுவதும் நமக்கு நலம் தரும். இப்படி சாப்பிட்டு வந்தால் அதன் ஊட்டச்சத்துக்கள் இதய நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக விஞ்ஞானிகள் 30 ஆண்டுகளாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளனர். மேலும் நீண்ட நாள் வாழ்வது தொடர்பாக வெளியான 26 ஆய்வுகளை அலசி ஆராய்ந்துள்ளனர். இவற்றில் காய்கறிகளை பச்சையாக அதிக அளவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு வாழ்நாள் அதிகரித்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே தினசரி மூன்று காய்கறிகள், இரண்டு பழங்களை சாப்பிடும்படி விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர். ஐந்து வெவ்வேறு விதமான காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வதே நம்முடைய ஆரோக்கியத்துக்கு போதுமானது. கூடுதலாக ஒன்று, இரண்டு காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்வதால் கூடுதலாக எந்த பலனும் வந்துவிடப் போவது இல்லை என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் பேராசிரியர் அன்னே தொர்டிக் கூறுகையில், “எல்லா காய்கறிகளும் பழங்களும் ஒரே மாதிரியான பலனைத் தருவது இல்லை. சிட்ரஸ் பழங்கள், பச்சைக் காய்கறிகள், மாவுச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள் வெவ்வேறு விதமான பலன்களையே அளிக்கின்றன.

நம்முடைய தட்டில் சமைத்த உணவு பாதி இருக்கிறது என்றால் அதற்கு இணையான அளவுக்கு பச்சைக் காய்கறிகள், பழங்கள் இருப்பது ஆரோக்கியத்தைக் காக்கும்” என்றார்.