இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெருந்தொற்றாக உருவெடுத்துள்ளது. இதனை தடுக்க அந்தந்த மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிர படுத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். அதன் படி கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் 8 மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக்கு பின் பேசிய பிரதமர், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தால் இந்தியா விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என கூறியிருந்தார். கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தமிழகத்தில் பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.
இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகமாக்குவது தான் ஒரே வழி என்பதால், பல மாநிலங்களில் கொரோனா பரிசோதனை அதிகமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் 2.76 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 8.48 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. விரைவில் இந்தியா கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.