2 வாரத்துக்கு ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை… என்ன முடிவெடுக்கப் போகிறார் முதல்வர்?

 

2 வாரத்துக்கு ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை… என்ன முடிவெடுக்கப் போகிறார் முதல்வர்?

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், அது பற்றி என்ன முடிவெடுப்பது என்று ஆலோசிக்க அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் கொரோனா தீவிரம் அதிகமாக உள்ளது. அரசு எதிர்பார்த்தபடி ரேப்பிட் டெஸ்ட் கிட் இன்னும் அரசின் கைகளுக்கு வந்து சேரவில்லை. 12ம் தேதிக்குப் பிறகுதான் ரேப்பிட் டெஸ்ட் கிட் பயன்படுத்தி பரிசோதனை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இதுவரை கடந்த மூன்று மாதங்கள் தமிழகத்தில் கொரோனா டெஸ்ட் 6300 என்ற அளவிலேயே எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாவது கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக ஊரடங்கை மாநில அரசுகள் நீட்டித்து வருகின்றன. ஒடிஷா முதலில் ஊரடங்கை நீட்டிக்கும் அறிவிப்பை வெளியிட்டது. அதை பின்பற்றி பஞ்சாப் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசிக்க நாளை அமைச்சரவை கூட்டத்துக்கு பழனிசாமி அழைப்புவிடுத்துள்ளார். மாலை ஐந்து மணிக்கு நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இது பற்றி முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு என்பது தவிர்க்க முடியாதது… ஆனால், அத்தியாவசிய தேவைகளுக்கு கடைகளுக்கு செல்ல வேண்டிய தேவை உள்ளது. மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதால் சாதாரண தலைவலி, சளிக்கு கூட மருத்துவம் பார்க்க முடியாத நிலை உள்ளது. எதற்கெடுத்தாலும் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன்பு இதுபோன்ற அத்தியாவசிய தேவைகள் குறித்து தீர்க்கமான முடிவெடுத்துவிட்டு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்துள்ளன.

உழைக்கும் மக்களுக்கு கொரோனா வராது என்று அசட்டு சிரிப்பு சிரித்து கோட்டைவிட்டது போன்ற நிலை மீண்டும் உருவாகிவிடக் கூடாது என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பும்.