2-வது டெஸ்ட் போட்டி: கேப்டன் சீன் வில்லியம்ஸ் சதம் – வலுவான நிலையில் ஜிம்பாப்வே

 

2-வது டெஸ்ட் போட்டி: கேப்டன் சீன் வில்லியம்ஸ் சதம் – வலுவான நிலையில் ஜிம்பாப்வே

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்துள்ளது.

ஹராரே: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியை டிரா செய்ய ஜிம்பாப்வே அணி பெரிதும் முயன்றது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரேவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தொடக்க வீரர்கள் பிரின்ஸ் 9 ரன்னிலும், கெவின் கசுசா 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதேபோல கிரேக் எர்வின் 12 ரன்களில் அவுட்டானார்.

இதையடுத்து டெய்லரும், கேப்டன் சீன் வில்லியம்ஸும் கூட்டணி அமைத்து ரன்களை குவித்தனர். இந்த இணை நிலைத்து நின்று ஆடியதால் ஜிம்பாப்வே அணி நல்ல ஸ்கோரை முதல் நாளில் குவித்தது. டெய்லர் 62 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய சிக்கந்தரும் அரைசதம் விளாசினார். அவர் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய கேப்டன் சீன் வில்லியம்ஸ் அபாரமாக சதமடித்தார். அவர் 107 ரன்களில் அவுட்டானார்.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்துள்ளது. ரெஜிஸ் 31 ரன்களுடனும், டினோடென்டா 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல், தனஞ்செய-டி-சில்வா தலா இரண்டு விக்கெட்டுகளும், குமாரா மற்றும் லசித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.