2 ஆயிரம் ரூபாய் நோட்டு குறித்து கவலைப்படாதீங்க – மத்திய நிதித்துறை இணையமைச்சர் தகவல்

 

2 ஆயிரம் ரூபாய் நோட்டு குறித்து கவலைப்படாதீங்க – மத்திய நிதித்துறை இணையமைச்சர் தகவல்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற போவதாக வரும் தகவல்கள் குறித்து கவலைப்படாதீங்க என மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.பி. விஷம்பர் பிரசாத் நிஷாத் பேசுகையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகத்தால் கருப்புப்பணம் அதிகரித்து விட்டது. 2 ஆயிரம் நோட்டுக்கு பதிலாக மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகம் ஆக உள்ளதாக மக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுகிறது என தெரிவித்தார். இதனையடுத்து உறுப்பினரின் கேள்விக்கு  மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பணமதிப்பிழப்பு

பணமதிப்பிழப்பு (ரூ.2 ஆயிரம் நோட்டு) குறித்து உலாவரும் தகவல்தான் உண்மையான கவலை. நீங்கள் அது பற்றி கவலைப்பட வேண்டாம் என நான் நினைக்கிறேன். கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருதல், போலி இந்திய ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பது,  தீவிரவாதம் மற்றும் இடது சாரி தீவிரவாதத்துக்கு நிதி அளிக்கும் வேரை அளிப்பது, முறைசாரா பொருளாதாரத்தை முறைசார் பொருளாதாரமாக மாற்றுவது, வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிப்பது, வேலைவாய்ப்பும் மற்றும் ரொக்கமில்லா பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிப்பது உள்ளிட்டவை பணமதிப்பிழப்பின் முக்கிய நோக்கங்கள்.

அனுராக் சிங் தாகூர்

2014 அக்டோபர் முதல் 2016 அக்டோபர் வரையிலான காலத்தில் ஆண்டுக்கு புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டு மதிப்பு  சராசரியாக 14.51 சதவீதம் வளர்ச்சி கண்டது. அதன்படி பார்த்தால் 2019 டிசம்பர் 2ம் தேதி நிலவரப்படி நம் நாட்டில் ரூ.25.40 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்க வேண்டும். ஆனால் ரூ.22.35 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் முறைசாரா பொருளாதாரத்தில் பண பயன்பாட்டை குறைத்தல் ஆகியவற்றை தொடர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ரூ.3.04 லட்சம் கோடி அளவுக்கு ரூபாய் நோட்டு புழக்கம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.