2 ஆண்டுகள் கடும் போராட்டம்; ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து ரூ.33 பெற்ற இளைஞர்!

 

2 ஆண்டுகள் கடும் போராட்டம்; ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து ரூ.33 பெற்ற இளைஞர்!

ஜி.எஸ்.டி., குழப்பதால் ரத்து செய்த ரயில்வே டிக்கெட்டுக்கு ரூ.33-யை இரண்டு ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் இளைஞர் ஒருவர் பெற்றுள்ளார்.

ஜெய்பூர்: ஜி.எஸ்.டி., குழப்பதால் ரத்து செய்த ரயில்வே டிக்கெட்டுக்கு ரூ.33யை இரண்டு ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் இளைஞர் ஒருவர் பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சேர்ந்தவர் சுஜித் சுவாமி (30). பொறியாளரான இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோட்டாவில் இருந்து தில்லி செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். ஆனால், வேறு வேலை நிமித்தமாக திட்டமிட்டபடி பயணத்தை தொடர முடியாத அவர், தான் முன்பதிவு செய்த ரூ.765 தொகை கொண்ட ரயில் டிக்கெட்டை ரத்து செய்துள்ளார்.

sujith swamy

இதையடுத்து, அவருக்கு சேவைக் கட்டணம் ரூ.65 போக மீதி தொகையை ரயில்வே நிர்வாகம் செலுத்த வேண்டும். ஆனால், அவரது வங்கிக் கணக்குக்கு ரூ.700 வர வேண்டிய நிலையில், ரூ.665 மட்டுமே வந்துள்ளது. தொடர்ந்து, அவர் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், வழக்கம் போலவே அரசு நிர்வாகமான ரயில்வேயிடம் இருந்து எவ்வித பதிலும் சரியாக வரவில்லை.

அதன்பின்னர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இதுகுறித்து  அவர் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ரயில்வே நிர்வாகம், ஜிஎஸ்டி தொகை பிடித்தம் செய்யப்பட்டது போக மீத தொகை அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

ஆனால், ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பே தான் டிக்கெட்டை முன்பதிவு செய்து அதனை ரத்தும் செய்துவிட்டதை சுட்டிக்காட்டி அது தொடர்பாக விளக்கம் கோரி மனு அளித்துள்ளார். அவரது மனு பல கட்டங்களாக, ரயில்வே துறையின் பல அலுவலகங்களுக்கு சென்றுள்ளது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் கடும் போராட்டங்களுக்கு பின்னர், சுஜித் சுவாமிக்கு ரூ.33யை ரயில்வே நிர்வாகம் அவரது வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளது. அதுவும் அவருக்கு ரூ.35 அனுப்ப வேண்டிய நிலையில், ஜிஎஸ்டி பிடித்தம் ரூ.2 போக ரூ.33 மட்டுமே அனுப்பியுள்ளது.

irctc

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், ஜிஎஸ்டி அமல்படுத்திய 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி, ஜிஎஸ்டி கட்டணத்துடன் சேர்ந்து தொகை பிடித்தம் செய்யப்பட்டு கழிப்பதாக இருந்தது. ஆனால், பின்னர் எங்களது முடிவில் மாற்றம் கொண்டு வரப்பட்டு ஜிஎஸ்டிக்கு முன்னதாக பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி தொகையை பிடித்தம் செய்வதில்லை என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, உங்களுக்கு ரூ.65 மட்டுமே கழிக்கப்பட வேண்டும். ஆனால், ரூ.100 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள தொகை விரைவில் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, கடந்த 1ம் தேதி அவருக்கு அந்த தொகை அனுப்பப்பட்டுள்ளது.

ரூ.35க்காக நன் போராடவில்லை. மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே போராடி எனது பணத்தை பெற்றுள்ளேன். ஜிஎஸ்டி குழப்பதால், 10 நாட்களில் மட்டும் ரூ.3.34 கோடி ரயில்வேக்கு சென்றுள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் எனக்கு தெரிய வந்தது என சுஜித் சுவாமி தெரிவித்துள்ளார்.