1996 – தேர்தல் போல ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா… அது எடுபடுமா?

 

1996 – தேர்தல் போல ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா… அது எடுபடுமா?

ரஜினிகாந்த் வெளிப்படையாகவே தன் அரசியல் முடிவைப் பற்றித் தெளிவாக அறிவித்துவிட்டார். அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ’நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் இந்த முடிவு தமிழக சட்டமன்ற தேர்தலில் எப்படி எதிரொலிக்கும் என்பதுதான் பலர் முன் உள்ள கேள்வி. தன் உடல்நிலை காரணத்தை வெளிப்படையாகச் சொல்லியும் சிலர், ‘நேரடி அரசியலுக்குத்தான் வரவில்லை. 1996 ஆண்டு தேர்தலைப் போல வாய்ஸ் கொடுப்பார்’ என்று எதிர்பார்க்கிறார்கள்.

1996 – தேர்தல் போல ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா… அது எடுபடுமா?

பாட்ஷா பட வெற்றி விழாவில், அப்போது ஆளும் ஆட்சியைப் பற்றி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதிமுக அரசு பற்றிய ரஜினியின் பேச்சால், அவருக்குப் பலவிதங்களில் தொந்தரவு கொடுக்க, 1996 -ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ‘திமுக – த.மா.கா கூட்டணிக்கு தன் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்தார். அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இதே நிலைப்பாட்டை 2021 சட்டமன்ற தேர்தலில் செய்ய வைக்க சிலர் தங்களின் அடுத்த முயற்சியாகச் செய்வார்கள். அந்தச் சிலர் யாராக இருக்கலாம் என்று யூகித்தால், இதுவரை ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி வற்புறுத்தியவர்களே இருக்கக்கூடும்.

1996 – தேர்தல் போல ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா… அது எடுபடுமா?

அப்படிப் பார்க்கையில், பாஜக தரப்பிலிருந்து அவர்களின் கட்சி சார்பாக ரஜினியின் வாய்ஸை எதிர்பார்ப்பார்கள். இது சாத்தியம்தானா?

முதலில், தமிழகம் என்பது பாஜகவுக்கு எதிரான மனநிலை அதிகம் கொண்ட மாநிலம். அதனால், பாஜகவுக்கு ஆதரவான வாய்ஸ் கொடுக்க ரஜினி முன் வருவாரா என்பது பெரும் சந்தேகம்.

ஏனெனில், 2004 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல். பி்ரசாரத்திற்காக வந்திருந்த அப்போதைய பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து பேசினார் ரஜினி. அந்தத் தேர்தலில் அதிமுகவும் பாஜக கூட்டணி வைத்திருந்தது. வாஜ்பாய் நதிகள் இணைப்புத்திட்டத்தை முன்மொழிந்திருந்தார். ரஜினி தனது ஆதரவை நேரடியாகத் தெரிவிக்காமல், ”நாட்டின் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க யார் முயற்சி எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப்போடுங்கள்’ என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். ஆனால், அந்தத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி ஒரு இடத்தில்கூட வெல்ல முடியவில்லை. எனவே, ரஜினி வாய்ஸ் எடுபட வில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதுவும் ரஜினியின் மனதில் ஓடும்.

1996 – தேர்தல் போல ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா… அது எடுபடுமா?

மேலும், தற்போதைய சிஸ்டம் சரியில்லை என்று தொடர்ந்து பேசி வருபவர் ரஜினி. பாஜகவோ பத்தாண்டுகளாக தமிழ்நாடு சிஸ்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிமுகவோடு கூட்டணி வைத்திருக்கிறது. எனவே, பாஜகவுக்கு ஆதரவு வாய்ஸ் எனும்போது அது அதிமுகவுக்கும் என்றாகி விடும். அப்படியானால், அவர் பேசிய சிஸ்டம் சரியில்லை என்பது கேள்விக்குள்ளாகும்; கேலிக்குள்ளாகும்.

எல்லாம் தவிர்த்துப் பார்த்தாலும் ரஜினியின் மீது எப்போது காவி முத்திரை குத்தலாம் என்று ஒரு குழுவினர் காத்திருக்கிறார்கள். அவர் அரசியல் கட்சித் தொடங்குகிறேன் என்றதுமே, அதற்கான வேலை தொடங்கி விட்டது. ஒருவேளை பாஜகவுக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுத்தால் அது இன்னும் பாதகமாகவே முடியக்கூடும்.

1996 – தேர்தல் போல ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா… அது எடுபடுமா?

எப்படிப் பார்த்தாலும் 96 ஆம் ஆண்டின் சூழல் வேறு; 2021 ஆம் ஆண்டின் சூழல் வேறு. அதனால் ரஜினி எந்தக் கூட்டணிக்கும் வாய்ஸ் கொடுப்பதற்கு 99 சதவிகித வாய்ப்பு இல்லை. ஆயினும் அந்த 1 சதவிகிதத்தை நம்பி முயற்சி செய்வார்கள்.