1971ல் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்! பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த ராஜ்நாத் சிங்

 

1971ல் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்! பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த ராஜ்நாத் சிங்

1971ல் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள் அப்படி செய்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு என்ன நடக்கும் என உங்களுக்கு தெரியும் என பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது: பாலகோட் தீவிரவாத முகாமை தாக்கும் போது மிகவும் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டோம். பாகிஸ்தான் அல்லது அதன் ராணுவத்தை தாக்கி விட கூடாது. பாலகோட் தீவிரவாத முகாமை மட்டுமே தாக்க வேண்டும் என்ற இலக்குடன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரித்தால் அப்புறம் எண்ணங்கள் மாறி விடலாம்.

தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்

1971ல் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள் என பாகிஸ்தானுக்கு அடிக்கடி வலியுறுத்துகிறேன். அப்போது பாகிஸ்தான் உடைந்து வங்கதேசம் உருவானது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு என்ன நடக்கும் என்பதை மனதில் கொண்டு 1971ல் செய்த அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்காக ஜம்மு அண்டு காஷ்மீரின் சட்டப்பேரவையில் 24 தொகுதிகள் காலியாக உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்

பாலகோட் தாக்குதலை அடுத்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் முயற்சி செய்து வருவதாக ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் கடந்த சில தினங்களுக்கு முன் கூறியதை குறிப்பிட்டுதான் ராஜ்நாத் சிங் தற்போது பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.