பறவைக் காய்ச்சல் எதிரொலி – முட்டை, கோழி இறைச்சி சாப்பிடலாமா ? – மக்கள் அச்சம்!

 

பறவைக் காய்ச்சல் எதிரொலி – முட்டை, கோழி இறைச்சி சாப்பிடலாமா ? – மக்கள் அச்சம்!

உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று அச்சம் இப்போதுதான் மெல்ல மெல்ல விலகி வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு நிரந்தர தீர்வாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பணிகள் நடந்து வருகின்றன. அதையடுத்து தற்போது கொரோனா அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த பட்டியலில் சமீபத்தில், இந்தியாவும் இணைந்துள்ளது. இதையடுத்து தற்போது கொரோனா வைரஸ் அச்சம் நீங்கி, ஒரு நம்பிக்கை உருவாகியுள்ள நிலையில் மீண்டும் அச்சுறுத்தலாக வந்துள்ளது பறவை காய்ச்சல்.

பறவைக் காய்ச்சல் எதிரொலி – முட்டை, கோழி இறைச்சி சாப்பிடலாமா ? – மக்கள் அச்சம்!

ஏற்கெனவே உருமாறிய கொரோனா வைரஸ், இரண்டாம் அலையாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் புதிய நெருக்கடியாக பறவைக்காய்ச்சல் அச்சம் சுற்றத் தொடங்கி உள்ளது. பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்கெனவே 2005 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டன. அதன் பின்னர் பறவைக்காய்ச்சல் 2015 ஆம் ஆண்டில் பெரும் அச்சுறுத்தலாக இந்தியாவில் பரவியதுடன், பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் இந்தியாவில் பறவை காய்ச்சல் கண்டறியப்படாத நிலையில், தற்போது மீண்டும் பறவைக் காய்ச்சல் தொற்று செய்திகள் வரத் தொடங்கி உள்ளன.

மத்திய பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வந்த தகவல்கள்படி குஜராத் மாநிலத்தில் 53 பறவைகளுக்கு இந்த காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டு, அவை அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் 170 பறவைகளுக்கு கண்டுபிடிக்கப்பட்டு அவை அழிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கேரளாவில் மிகத்தீவிரமாக பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் அந்த மாநிலம் தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. அங்கு 2 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் வைரஸ், மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது என்பதால், மிகத் தீவிரமான கண்காணிப்பு பணிகளை அந்த மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வாத்து, கோழி உள்ளிட்ட பறவை இனங்களை கொண்டு வருவதற்கு தமிழக அரசு தடை செய்துள்ளது.

பறவைக் காய்ச்சல் எதிரொலி – முட்டை, கோழி இறைச்சி சாப்பிடலாமா ? – மக்கள் அச்சம்!

ஹிமாச்சல் பிரதேசத்தில் புலம்பெயரும் பறவைகளில் சுமார் 1,800 பறவைகள் இறந்து கிடந்துள்ளன. இதையடுத்து அதற்கான காரணம் என்ன என ஆய்வு செய்தபோது அவை பறவைக் காய்ச்சலால் இறந்தது தெரியவந்துள்ளது.

பறவைகள் மூலம் பரவும் இந்த வைரஸ் H5N1 வகை வைரசாகும். நேரடியாக மனிதர்களுக்கு பரவவில்லை என்றாலும், இந்த தொற்றால் இறந்த பறவைகளோடு தொடர்புடைய மனிதர்களுக்கு கடும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. இந்த காய்ச்சல் பரவிய பறவைகள், விலங்கினங்களை உரிய பாதுகாப்பு இல்லாமல் அப்புறப்படுத்துவது, அல்லது தொற்றால் பாதிக்கப்பட்ட பறவை இறைச்சிகளை உண்பது ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில், பறவைகள் மூலம் காய்ச்சல் பரவும் என்பதால் முட்டை மற்றும் இறைச்சிகள் ஆகியவற்றில் இந்த தொற்று இருக்கும் என அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து பறவை காய்ச்சல் பரவி வரும் பகுதிகளில் கோழிகள் மற்றும் கோழி இறைச்சி உள்ளிட்ட இறைச்சிகளை விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் கோழிகள் மற்றும் வாத்துக்களை முற்றாக அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் மனிதர்களுக்கும் பறவைக் காய்ச்சல் பரவுவது தடுக்கப்படுகிறது.

பறவைக் காய்ச்சல் எதிரொலி – முட்டை, கோழி இறைச்சி சாப்பிடலாமா ? – மக்கள் அச்சம்!

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே 2005 ஆம் ஆண்டில் அளித்த வழிகாட்டலில், பறவைக்காய்ச்சல் அச்சம் காரணமாக கோழி இறைச்சி அல்லது இதர இறைச்சிகளை முற்றாக கைவிடத் தேவையில்லை. அவற்றை முறையாக வேகவைத்து உண்பதன் மூலம் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளது. 165 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் வேகவைத்து உண்ணலாம் என கூறியிருந்தது. கிராமப்புறங்களில் பறவைக் காய்ச்சல் பரவியது தெரியாமல், கோழி மற்றும் பறவை இறைச்சிகள் வரும் பட்சத்தில் அவற்றை கவனமாக தவிர்ப்பதே நல்லது என்றும் உலக சுகாதாரம் நிறுவனம் வழிகாட்டுதல்களை வழங்கி இருந்தது.

பறவைக்காய்ச்சல் பரவிய பகுதிகளை கட்டுப்படுத்துவதற்கு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே பறவைக்காய்ச்சல் பரவிய விலங்கினங்களை மிக பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டியது அவசியமாகும். முறையான வெப்பநிலையில் வேகவைத்து உண்பது பாதுகாப்பானது என்றாலும், பரவி காய்ச்சல் அச்சம் உருவாகியுள்ள இந்த நேரத்தில் இறைச்சி உணவுகளை தவிர்ப்பது நல்லது என்பதே எல்லோரது கருத்தாகவும் உள்ளது .