புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக ஆன்லைனின் உணவு ஆர்டர் செய்யும் நிறுவனங்களுக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது. ஆண்டு இறுதி கொண்டாட்டத்துக்காக, இந்தியர்கள் வழக்கத்தைவிட ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளது.
கொரோனா ஊரடங்கின்போது ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. மக்கள் ஸ்விக்கி, ஸொமோட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி செயலிகளில் ஆர்டர்கள் செய்து வாங்கி சாப்பிட்டனர். இதனால் ஊரங்கின்போது இந்த நிறுவனங்கள் அபரிமிதமான வளர்ச்சி கண்டன.

இந்த நிலையில் புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டங்களுக்கான விதவிதமான உணவுகளை வாங்கி அந்த நிறுவனங்களுக்கு பாலை வார்த்துள்ளனர் மக்கள். கடந்த 31 ஆம் தேதி இரவு மட்டும் இதுவரை இல்லாத வகையில் உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனராம். செயலிகளில் ஆர்டர் எடுத்த பல உணவு கடைகள் உரிய நேரத்தில் சப்ளை செய்வதற்கு திணறி விட்டார்களாம்.
ஸோமோட்டோ செயலியில் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று மட்டும் விற்பனை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவர் தீபீந்தர் கோயல் வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் 31 ஆம் தேதி மாலை நிமிடத்துக்கு 4 ஆயிரத்து 245 ஆர்டர்கள் குவிந்தன. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 60 சதவீதம் அதிகம் என டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 75 கோடி ரூபாய்க்கு அன்று மட்டும் வர்த்தகம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆர்டர்களை டெலிவரி செய்வதற்காக சுமார் 1 லட்சம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதைவிடவும் முக்கியமாக உணவு டெலிவரி செய்வதில் புகார்கள் குறைவான நாளான 31 ஆம் தேதி இருந்தது என்றும் தீபீந்தர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்விக்கி நிறுவனத்தினர் கூறுகையில், 31 ஆம் தேதி இரவு ஆர்டர்கள் வழக்கத்தைவிட இரு மடங்காக இருந்தன என தெரிவித்துள்ளது. முக்கியமாக மெட்ரோ நகரங்களைத் தாண்டி, இரண்டாம் நிலை நகரங்களிலும் விற்பனை அதிகரிதததாம். குறிப்பாக 2020 ஆண்டில் ஒரே நாளில் அதிக வர்த்தகம் கண்ட நாள் டிசம்பர்31 ஆம் தேதி என குறிப்பிட்டுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை வெளியில் கொண்டாட தடை விதிக்கப்பட்டிருந்ததால், தாங்கள்ன் விரும்பிய உணவகங்களுக்கு செல்ல முடியாத மக்கள் உணவுகளையாவது ஆர்டர் செய்வோம் என வாங்கி சுவைத்து புத்தாண்டை வரவேற்றுள்ளனர். இதன்மூலம் எத்தனை தடைகள் வந்தாலும், நினைத்தபடி புத்தாண்டை வரவேற்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.