1947ல் முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி இருக்க வேண்டும்…. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய மத்திய பா.ஜ.க. அமைச்சர்…..

 

1947ல் முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி இருக்க வேண்டும்…. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய மத்திய பா.ஜ.க. அமைச்சர்…..

1947ல் முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி இருக்க வேண்டும் என மத்திய பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் மீண்டும் ஒரு முறை சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சருமான கிரிராஜ் சிங் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். அதேபோல் நேற்றும் ஒரு கருத்தை கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். பீகார் மாநிலம் புர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசுகையில் கூறியதாவது: 

பாகிஸ்தான் கொடி

தேசத்துக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டிய நேரம் இது. 1947க்கு முன்னர் (முஹம்மது அலி) ஜின்னா ஒரு இஸ்லாமிய தேசத்துக்காக அழுத்தம் கொடுத்தார். நமது முன்னோர்களின் மிகப்பெரிய குறைப்பாடு இது. இதற்கான விலையை நாம் இப்போது கொடுக்கிறோம். அந்த நேரத்தில் முஸ்லிம் சகோதரர்களை அங்கு அனுப்பி, இந்துக்களை இங்கே கொண்டு வந்து இருந்தால், நாம் இந்த சூழ்நிலையில் இருக்க மாட்டோம். பாரத மக்களுக்கு இங்கு இடம் இல்லையென்றால் அவர்கள் வேறு எங்கு  போவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜே.பி. நட்டா

உத்தர பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய செமினரி தியோபந்த் ஒரு பயங்கரவாதத்தின் நீரூற்று என கடந்த சில தினங்களுக்கு முன் கிரிராஜ் சிங் பேசி இருந்தார். இதனையடுத்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கிரிராஜ் சிங்குக்கு சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.