தமிழகமெங்கும் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம்!

 

தமிழகமெங்கும் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம்!

மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் போராடும் உழவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழகமெங்கும் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலகங்களின் முன் மறியல் போராட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.

பெருங்குழும வேட்டைக்கான மூன்று சட்டங்களை வேளாண் சட்டங்கள் என்ற பெயரில் மோடி அரசு இயற்றியுள்ளது. இந்தச் சட்டங்கள் அவசரச் சட்டங்களாக 2020 சூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட காலத்திலேயே அவற்றை எதிர்த்து ஊர் ஊராகத் துண்டறிக்கை கொடுத்து பரப்புரை செய்தது காவிரி உரிமை மீட்புக்குழு! அத்துடன் அந்த மூன்று அவசரச் சட்ட நகல்களையும் எரித்துப் போராடினோம்!

தமிழகமெங்கும் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம்!

இப்போது டெல்லியில் கடும் குளிரில் வடநாட்டு உழவர்கள் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாகவும் – மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள இந்திய மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலகங்களின் முன் மறியல் போராட்டத்தை முன்னெடுத்தது காவிரி உரிமை மீட்புக் குழு!

தஞ்சையில் பாலாஜி நகரிலுள்ள இந்திய அரசின் உற்பத்தி வரி அலுவலகம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் நடந்த எழுச்சிமிகு மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வரி வசூல் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்ற தோழர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. இதனையடுத்து, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழு முழக்கங்கள் எழுப்பினார்.

தமிழகமெங்கும் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம்!

திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடியில் இந்தியத் தலைமை அஞ்சலகம் முன்பு தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளரும், காவிரி உரிமை மீட்புக் குழு செயல்பாட்டாளருமான மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் அவர்கள் தலைமையில் மறியல் போராட்டத்தில் சற்றொப்ப 250 உழவர்கள் பங்கேற்றனர்.

தஞ்சை மாவட்டம் – குடந்தையில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கான போராட்டம் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. கும்பகோணம் தீயணைப்புத்துறை வாசலில் குழுமிய காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்புகளை வைத்து தயாராக இருந்தனர். போராட்டக்காரர்கள் காவல்துறையினர் வைத்த தடுப்புகளை தள்ளி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு சாலையை மறித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை மாவட்டம் – பூதலூரில் நடைபெற்ற தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் சோழன் விரைவு வண்டி மறிக்கப்பட்டது. தமிழக விவசாய சங்க பூதலூர் ஒன்றியப் பொறுப்பாளர் திரு. பா. தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இம்மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உழவர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். திரு. சீ. தனபாலன் முன்னிலை வகித்தார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் பி. தென்னவன், மாரனேரி நடராசன், ஐயா கலைக்கோவன், ஐயா புதுப்பட்டி செல்வம், நாம் தமிழர் கட்சி பகுதிச்செயல்பாட்டாளர் திரு. அற்புதராஜ், திமுக திரு. பவுன்ராஜ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட உழவர்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து, பூதலூர் இரம்யா திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

ஆடுதுறையில் தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழக கொள்கைப்பரப்பு செயலாளர் புலவர் இரா. சிவராசு முன்னிலை வகித்தார். த.தே.பா.க. தஞ்சை மாவட்ட துணைச்செயலாளர் தஅரங்க. பாரி, திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிச் செயலாளர் வழக்கறிஞர் காசி. சிறீதர், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் தளபதி இராகுல், மையச்செயற்குழு உறுப்பினர் தோழர் தமோதரன், திருப்பனந்தாள் ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் கோதை. இராவணன், திருவிடைமருதூர் ஒன்றியச் செயலாளர் பாஸ்.விஜி மற்றும் தோழர்கள் பிரபுதேவா, கவியரசு, சிறீதர், கார்த்தி, பாபு, வெற்றி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழகமெங்கும் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம்!

திருச்சியில் தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம், காவிரி உரிமை மீட்புக் குழு திருச்சி ஒருங்கிணைப்பாளர் மூ.த. கவித்துவன் தலைமையில் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் ம.பா. சின்னத்துரை, தமிழக முற்போக்கு பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தலைவர் வழக்கறிஞர் த. பானுமதி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் வே.க. இலக்குவன், மனிதநேய சனநாயகக் கட்சி மாவட்டத் தலைவர் பேராசிரியர் மொய்தீன், தமிழ்ப் பேரரசுக் கட்சி மாவட்டச் செயலாளர் உசைன், த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் இனியன், பாவலர் இராசாரகுநாதன், வெள்ளம்மாள், விராலிமலை செயலாளர் வே.பூ. இராமராசு, திருவெறும்பூர் நகரக்கிளை செயல்பாட்டாளர் தோழர் பாஸ்கரன், கொத்தமங்கலம் கிளைச் செயலாளர் தோழர் அன்பரசன் உள்ளிட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில் இந்தியத் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடும் போராட்டம், காவிரி உரிமை மீட்புக் குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் இரா. வேல்சாமி தலைமையில் நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, உலகத் தமிழ்க் கழகம் புதுச்சேரி அமைப்பாளர் கோ. தமிழுலகன்,கௌசல்யா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்டம் – பெண்ணாடத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன் தலைமையில் நடைபெற்றது. 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழகமெங்கும் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம்!

கிருட்டிணகிரி மாவட்டம் – இராயக்கோட்டையில் பேருந்து நிலையம் முன்பு, தமிழக உழவர் முன்னணி சார்பில், பொதுச் செயலாளர் தூ. தூருவாசன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், தமிழக உழவர் முன்னணி தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. வாசு மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார் நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டியில் இந்தியத் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்க ஒன்றியச் செயலாளர் திரு. ப. பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது. த.தே.பே. மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி, தலைமைச் செயற்குழு தோழர் தை. ஜெயபால், தோழர்கள் து. இரமேசு, இரா. சரவணன், வழக்கறிஞர் இ. தனஞ்செயன், இரா. தனபாலன், புலவர் வல்வில்ஓரி, நாகை தமிழ்ச்செல்வன், பால்வண்ணன், சித்திரைச்செல்வன், வரதராசன், நா ஞானசேகரன், க. பழனிசாமி, கே. ராஜப்பா, தை. செந்தில்குமார், கோட்டூர் இராசேந்திரன், பால்வண்ணன், சித்திரைச்செல்வன், சா. கோவிந்தசாமி, கா. அரசு, க. பாலு, கா. செல்வம், மதியழகன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர் தோழர் ப. சிவவடிவேலு நன்றி கூறினார்.

மதுரையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்க மாநகரச் செயலாளர் தோழர் இரெ. இராசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்,

தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் குரும்பூரில் கடை வீதியில் மாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக உழவர் முன்னணி துணைத் தலைவர் திரு. மு. தமிழ்மணி தலைமை தாங்கி உரையாற்றினார். த.தே.பே. தோழர் விஜயநாராயணப் பெருமாள், நாம் தமிழர் கட்சி தோழர்கள் ஞானசேகரன், ஆனந்தவேலு ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளான பெண்களும், பொது மக்களும் பங்கேற்றனர்.