விஸ்வரூபம் எடுக்கும் ‘போஸ்ட் மெட்ரிக்’ விவகாரம் – வலுக்கும் தலைவர்களின் கண்டனம்

 

விஸ்வரூபம் எடுக்கும் ‘போஸ்ட் மெட்ரிக்’ விவகாரம் – வலுக்கும் தலைவர்களின் கண்டனம்

அடித்தட்டு மக்களுக்கு பாஜக தொடர்ச்சியாக வஞ்சகம் இழைத்து வருகின்றது. தற்போதும் பட்டியல் மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை ஒழித்துகட்டும் வகையில் செயல்படுகிறது மத்திய பாஜக அரசு.

சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட பழங்குடி இன மக்களின் குழந்தைகள் கல்வி பெறும் உரிமையினை நசுக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது பாஜக. இது கண்டனத்துக்கு உரியது என்று மதிமுக பொதுச்செயாளர் வைகோ தனது கண்டனத்தை பதிவு செய்திருந்த நிலையில்,

பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்குச் சுதந்திரத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையை நிறுத்திவிட மத்திய பாஜக அரசு முடிவு செய்து, சமூக நீதி மீது தொடர் தாக்குதல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு.

விஸ்வரூபம் எடுக்கும் ‘போஸ்ட் மெட்ரிக்’ விவகாரம் – வலுக்கும் தலைவர்களின் கண்டனம்

பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான திட்டம் இது” என்று கடந்த ஆண்டு தனது சுற்றறிக்கை மூலமாகவே ஒப்புக்கொண்டது மத்திய பா.ஜ.க. அரசு. தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு இந்த “போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையையே நிறுத்திவிட” முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ள டி.ஆர்.பாலு,

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையினை ரத்து செய்ய மத்திய பா.ஜ.க. அரசு முனைவது சமூகநீதிக்கும் பாஜகவிற்கும் பரம்பரையாக இருக்கும் கசப்புணர்வை வெளிப்படுத்துகிறது. 76 ஆண்டுகளாகப் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்தக் கல்வி உதவித் தொகை பா.ஜ.க. என்ற தனியொரு கட்சியின் யாசகம் அல்ல என்று சொல்லும் டி.ஆர்.பாலு, மண்ணின் மைந்தர்கள் என்ற முறையில் மத்திய அரசு வழங்க வேண்டிய அவர்களுக்கான அடிப்படை உரிமை என்பதை தற்போது பாஜக உணர வேண்டும். இந்தக் கல்வி உதவித் தொகையைப் பறிப்பது என்பது சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் பெயரையே நீக்குவதற்குச் சமம் என்று எச்சரிக்கிறார்.

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தைக் கைவிடுவதற்கு மத்திய பாஜக அரசு முடிவு செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது சமூக நீதியைக் குழிதோண்டி புதைக்கிற செயல் என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

போஸ்ட் மெட்ரிக் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, பாஜகவுக்கு எதிரான தலைவர்களின் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.