18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் – தி.மு.க விற்கு எதிரான வியூகமா ?

 

18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் – தி.மு.க விற்கு எதிரான வியூகமா ?

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 – ஆம் தேதி நடக்க இருக்கும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் இணைந்து காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாட்டின் 17 –  ஆவது நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 -ஆம் தேதி முதல் 7 கட்டமாக நாடு முழுவதும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இரண்டாவது கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18 – ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

சட்டமன்ற இடைத் தேர்தல் 

இந்நிலையில், இந்த பாராளுமன்றத் தேர்தலுடன் இணைந்து, தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. சட்ட மன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் மரணம்  காரணமாக காலியான தொகுதிகள் உட்பட மொத்தம் 21 தொகுதிகள் தமிழகத்தில் காலியாக உள்ளன.

ஆனால், தற்போது 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காரணம் என்ன ?

தமிழகத்தில் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், ஒசூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நிலக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.

  • திருப்பரங்குன்றம் தொகுதியை பொறுத்தமட்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.கே.போசை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் என்பவரும்,
  • ஓட்டப்பிடாரம் தொகுதியை பொறுத்தமட்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுந்தர்ராஜனை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமியும்,
  • அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தமட்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில்பாலாஜியை  எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த ஏ.பி.கீதா என்பவரும் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதில் ஏ.கே.போஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் விபத்தில் மரணித்தார் என்பதும், செந்தில்பாலாஜி தற்போது தி.மு.க வில் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட 3 வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அங்கு தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பெரும்பான்மை யாருக்கு ?

இந்நிலையில், சட்டமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கும் தி.மு.க பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க சரியாக 21 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை. தற்போது 18 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடக்க இருப்பதால், தி,மு,க பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புகள் இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால், விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து ஒன்றாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.