18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க டிடிவி தினகரன் அணியினர் முடிவு

 

18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க டிடிவி தினகரன் அணியினர் முடிவு

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனவும், 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க முடிவெடுத்திருப்பதாகவும் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்

மதுரை: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனவும், 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க முடிவெடுத்திருப்பதாகவும் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சபாநாயகரின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவர்கள் அனைவரும் பதவி இழந்துள்ளனர். அதேசமயம், தீர்ப்பை எதிர்த்து எம்எல்ஏ-க்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனவும், 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க முடிவெடுத்திருப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வேண்டாம் என்பதால் தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ளோம். மக்களின் கருத்துக்ளை கேட்ட பின்னர் பெரும்பாலான தகுதி நீக்க எம்எல்ஏ-க்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதர தகுதி நீக்க எம்எல்ஏ-க்களுடன் ஆலோசித்த பிறகு வருகிற 31-ம் தேதி மதுரையில் அதிகாரப்பூர்வமாக இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார்.

மேலும், இந்த ஆட்சி ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்கக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் விருப்பமாகவும், பெரும்பான்மையான நிர்வாகிகளின் விருப்பமாகவும் உள்ளது என குறிப்பிட்ட தினகரன், மேல்முறையீட்டால் தேர்தல் தள்ளிப் போவதையும், இந்த ஆட்சி நீடிப்பதையும் நாங்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.