18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு

 

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி ஆளுநரிடம் கடிதம் அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் திப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அமர்வு மாற்றுபட்ட தீர்ப்பை வழங்கியது.

18 எம்எல்ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், 18 எம்எல்ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தரும் தீர்ப்பு வழங்கினர். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.

நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பையடுத்து இந்த வழக்கானது மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு சென்றது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மூன்றாவது நீதிபதியாக நியமணம் செய்யப்பட்ட சத்யநாராயணன் முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை ஜூலை 23-ம் தேதி முதல் நீதிபதி சத்யநாராயணன் விசாரித்து வந்தார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதி நீதிபதி சத்தியநாராயணன் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். நீதிபதி விடுமுறையில் சென்றிருந்ததாலும், நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை விடப்பட்டிருந்ததாலும் இந்த வழக்கில் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வழக்கின் தீர்ப்பு  இன்று காலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3-வது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பை வழங்க உள்ளார்.