காவிகளின் தலையீடு; எரிச்சலடைந்த வைகோ

 

காவிகளின் தலையீடு; எரிச்சலடைந்த வைகோ

எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய ‘வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள் என பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், சனாதன சக்திகளுக்கு அடிபணிந்து பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து அருந்ததி ராய் புத்தகத்தின் கருத்துகள் நீக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

காவிகளின் தலையீடு; எரிச்சலடைந்த வைகோ

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் ஓங்கி குரல் எழுப்பி வருபவர் அருந்ததி ராய். இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சீர்குலைக்கும் பாசிச இந்துத்துவ சனாதன சக்திகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் கருத்தியல் போரை நடத்தி வருபவர்.

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகப் பட்டியலின மாணவர் ரோஹித் வெமுலா, ஏபிவிபி அராஜகத்தால் தற்கொலை செய்து கொண்டபோதும், டெல்லியில் ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்எஸ்எஸ் குண்டர்களால் தாக்கப்பட்டபோதும், அருந்ததி ராய் வெகுண்டு எழுந்து எதிர்ப்புத் தெரிவித்தார்’’என்று தெரிவித்து அவர்,

’’ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர் உரிமைகள் நசுக்கப்படுவதையும் நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்தியாவைப் பாசிசத்தின் கொடும் கரங்கள் வளைத்துள்ளதை உலக நாடுகளின் கவனத்திற்குத் தன்னுடைய கட்டுரைகள் மூலம் கொண்டு சென்றவர் என்பதால் அருந்ததி ராய் மீது இந்துத்துவ கும்பல் எரிச்சல் அடைந்துள்ளது.

சனாதன சக்திகளுக்கு அடிபணிந்து பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து அருந்ததி ராய் புத்தகத்தின் கருத்துகள் நீக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் கல்வித் துறையில் காவிகளின் தலையீடு ஆபத்தான போக்குக்கு வழிகோலும் வகையில் உருவாகி வருவதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’’என்கிறார் அழுத்தமாக.