‘’காலத்திற்கு தேவையான வழிமுறைகளை சொல்வதில்லை. அதேநேரம் நாங்களே ஏதாவது செய்தால் அதற்கு உடனடியா தடை போடுறாங்க. மொத்தத்தில் வம்பை விலை கொடுத்து வாங்கின கதையாகத்தான் இருக்குது’’ என்று வெடிக்கிறார் வடமாவட்ட திமுக மூத்த நிர்வாகி.
திமுகவின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார பொறுப்பை ஐபேக் கையிலெடுத்தபோது ரொம்பவே பில்டப் கொடுக்கப்பட்டது. ஐபேக் கையிலெடுத்துவிட்டது. இனி அடுத்து நம்ம ஆட்சிதான் என திமுகவினர் ஆனந்த கூத்தாடினார்கள். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே சாயம் வெளுத்துவிட்டது.
ஆங்காங்கே ரேண்டமாக சர்வே என்கிற பெயரில் கருத்துக்கணிப்பை நடத்திய ஐபேக் டீம், இதை முன்னிட்டு செய்த அத்துமீறல்கள் அநேகம் என்று கொதிக்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

ஒவ்வொரு பகுதியிலுமுள்ள வெயிட்டான பார்ட்டிகளை தொடர்புகொண்ட ஐபேக் ஆட்கள், ‘’உங்க தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலில் உங்க பெயரையும் பரிந்துரை செய்திருக்கிறோம். அதனால நீங்க..’’ என தூண்டில் போட்டது தலைமை வரை தெரியவந்தால், தலைமை இது பற்றி ஐபேக் நிறுவனத்திடம் விசாரிக்க, ’எங்கள் பெயரை யாரோ தப்பா யூஸ் பண்ணிட்டாங்க’ என சொல்லி சமாளித்திருக்கிறார்கள். இதன் பிறகு இணையவழி உறுப்பினர் சேர்க்கை, இணையவழி மாநாடுகள், தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்கள் என முன்னெடுக்கப்பட்டுவரும் காஸ்ட்லி நடவடிக்கைகளால் அந்த கட்சி நிர்வாகிகள் மத்தியில் அனல் பறக்கிறது.
‘’ என்றைக்கு ஐபேக் இங்கே கால் பதிச்சதோ அன்றையிலிருந்து எங்களுக்கு செலவும், வேலைப்பளுவும் அதிகமாகிவிட்டது. கொரோனா கால நிவாரண உதவிகளில் தொடங்கி இப்போது நடந்துவரும் இணையவழி தேர்தல் பிரச்சார கூட்டங்கள் வரை எல்லாமே ஐபேக் ஐடியாக்கள்தான். வெறும் கட்சிக்காரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சிகளுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறோம். தலைமை வழக்கம்போல எதுவும் தர்றதில்லை. இதில இதை அப்படி செய்; அதை இப்படி செய்யுண்ணு ஐபேக் ஆட்கள் அதிகாரம் வேற பண்றாங்க’’என்று கொதிக்கிறார் மத்திய மாவட்ட திமுக நிர்வாகி .

அவர் மேலும், ‘’பொது மக்கள் பங்கேற்காத இந்த நிகழ்ச்சிகளால் எந்த பிரயோசனமும் இல்லை. அதேநேரம் எதிர் தரப்பில் ஆளும் அதிமுகவில் அமைதியாக , அட்டகாசமாக தேர்தல் வேலைகளை செய்யத் தொடங்கிட்டாங்க. ஆனால் எங்க பக்கம் வெறுமனே டேட்டாக்களை கையில் வைத்துக்கொண்டு அதையும் இதையும் சொல்லி தலைமையை ஏமாற்றும் வேலைதான் நடக்குது. நிலைமை இப்படியே நீடித்தால் சிக்கல்தான்’’என்று புலம்புகிறார்.
திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தின் மீது அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஏகக் கடுப்பில் இருக்கும் விவகாரம் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு தெரியவர, கட்சிக்குள் ஒருவித கலக்கம் ஏற்பட்டிருக்கிறது.