‘வன்னியர்களுக்கு 17 சதவிகிதம் இடஒதுக்கீடு’ தீர்மானம் இயற்றிய பாமக

 

‘வன்னியர்களுக்கு 17 சதவிகிதம் இடஒதுக்கீடு’ தீர்மானம் இயற்றிய பாமக

பாட்டாளி மக்கள் கட்சியின் 32 ஆம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி இணைய வழியில் சிறப்புப் பொதுக்கூட்டத்தை நடத்தினர். இதில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் மற்றும் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துர் அன்புமணி ராமதாஸ் முன்நின்று நடத்தினர். அந்தச் சிறப்புச் செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அவற்றில் ஒன்று, வன்னியர்களுக்கு 17 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

அக்கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களில் சில:

‘வன்னியர்களுக்கு 17 சதவிகிதம் இடஒதுக்கீடு’ தீர்மானம் இயற்றிய பாமக

* கொரோனா வைரஸ் பரவல் விரைவாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்; அரசின் முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்!

உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கொரோனா வைரஸ் நோய் தமிழ்நாட்டில் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று வரை 1,51,820 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,496 ஆகும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உலகில் கொரோனா பரவல் உள்ள 215 நாடுகளில் 207 நாடுகளில் ஏற்படும் பாதிப்புகளைவிட அதிகம் ஆகும். அதேபோல் சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,291 பேரும், ஒட்டுமொத்தமாக 80,961 பேரும் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனா பரவல் எந்த அளவில் உள்ளது? அதற்கான காரணங்கள் என்ன? என்பதை கண்டறிந்து, அதற்கேற்ற வகையில் புதிய உத்திகளை வகுத்து அரசு செயல்படுத்த வேண்டும்; சென்னை தவிர்த்த மற்ற அனைத்து மாவட்டங்களிலும் செய்யப்படும் தினசரி சோதனைகளின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; ஒவ்வொரு ஊரிலும் காய்ச்சல் முகாம்களை நடத்தி கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய வேண்டும். இத்தகைய பணிகள் மூலம் மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும். அத்துடன், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு வாரம் ரூ.1000 வீதம் நிதியுதவி வழங்க வேண்டும்; இதற்கு மத்திய அரசும் உதவ வேண்டும்.

பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்தல், முகக்கவசம் மற்றும் கையுறை அணிதல் கட்டாயமாக்கிக் கொள்ளுதல், வெளியில் சென்று திரும்பியவுடன் சோப்பு நீரால் கழுவுதல் உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பா.ம.க. செயற்குழு கோருகிறது.

‘வன்னியர்களுக்கு 17 சதவிகிதம் இடஒதுக்கீடு’ தீர்மானம் இயற்றிய பாமக

* :தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 17% தனி இடஒதுக்கீடு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் எம். தணிகாச்சலம் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை வழங்க வேண்டும் என்பது ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பணிகளில் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயம் வன்னியர்கள் தான் என்று 1931ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், அமைக்கப்பட்ட சட்டநாதன் ஆணையம், அம்பா சங்கர் ஆணையம் ஆகியவையும் இதை உறுதி செய்துள்ளன.

மருத்துவர் ராமதாஸ் தலைமையில் 9 ஆண்டுகள் தொடர் போராட்டம் நடத்திய போதிலும், வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயத்தினரை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு, அப்பிரிவுக்கு 20% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அப்பிரிவில் வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. வன்னியர்களுக்கு உரிய சமூகநீதியும், இடஒதுக்கீடும் கிடைக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். வன்னியர்களின் மக்கள்தொகை மற்றும் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் வன்னியர்களுக்கு 17% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முறையான ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி, உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று பா.ம.க. செயற்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

‘வன்னியர்களுக்கு 17 சதவிகிதம் இடஒதுக்கீடு’ தீர்மானம் இயற்றிய பாமக

* இளம்பெண்கள் & குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக 01.01.2013-இல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தாலே பெருமளவில் குற்றங்களைத் தடுத்திருக்க முடியும். தமிழ்நாட்டில் தாரளமாக மது கிடைப்பதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு காரணம் ஆகும். இனி வரும் காலங்களிலாவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை, உடனடியாக பெற்றுத் தருவதன் மூலம் இத்ததைய குற்றங்களுக்கு முடிவு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

‘வன்னியர்களுக்கு 17 சதவிகிதம் இடஒதுக்கீடு’ தீர்மானம் இயற்றிய பாமக

*:மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குதல்!

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்களில் 15 விழுக்காட்டையும், முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்களில் 50 விழுக்காட்டையும் மாநில அரசுகள், அகில இந்திய தொகுப்புக்கு வழங்குகின்றன. அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியல் இனத்தவருக்கு 15 விழுக்காடும், பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடும், பொதுப் பிரிவினருக்கான இடங்களில் உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு மறுத்து வருவது, பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியாகும்.

இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் அநீதியானவை; நடைமுறை சாத்தியமற்றவை. பட்டியலினத்தவருக்கு ஒரு நீதி, உயர்சாதி ஏழைகளுக்கு ஒரு நீதி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இன்னொரு நீதி என மத்திய அரசு பாகுபாடு காட்டக்கூடாது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளை களையும் வகையில், மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்தவித நிபந்தனையுமின்றி 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும் என பா.ம.க. கோருகிறது.

‘வன்னியர்களுக்கு 17 சதவிகிதம் இடஒதுக்கீடு’ தீர்மானம் இயற்றிய பாமக

* :கிரிமிலேயரை கணக்கிட சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ளும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்!

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரிமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடந்த மார்ச் மாதம் எதிர்ப்புத் தெரிவித்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இப்போது மத்திய அரசின் முடிவுக்கான எதிர்ப்பை விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளது.

கிரிமிலேயரை கணக்கிடும்போது சம்பளத்தையும், விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்று 1993ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாறாக கிரிமிலேயரைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று வல்லுநர் குழு பரிந்துரைத்திருப்பதும், அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதும் நியாயமற்றவை. இந்த விசயத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பாதுகாவலனாக நின்று போராட வேண்டிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதற்கு மாறாக, மத்திய அரசின் சமூக அநீதிக்கு துணைபோவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கிரிமிலேயரைக் கணக்கிடுவதில் சம்பளத்தை சேர்த்துக்கொள்ள முடியாது என்பதில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உறுதியாக இருக்க வேண்டும். மத்திய அரசும், வல்லுநர் குழுவின் அபத்தமான பரிந்துரையை நிராகரித்துவிட்டு, கிரிமிலேயரை கணக்கிடுவதில் தற்போதுள்ள நிலையே தொடரும்; கிரிமிலேயர் வருமான வரம்பு ஆண்டுக்கு 12 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கவேண்டும் என இச்செயற்குழு கோருகிறது.

‘வன்னியர்களுக்கு 17 சதவிகிதம் இடஒதுக்கீடு’ தீர்மானம் இயற்றிய பாமக

* புதிய மதுக்கடைகளை திறக்கக்கூடாது: முழு மதுவிலக்கே உடனடித் தேவை!

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் எலைட் மதுக்கடைகளையும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் ஏற்கெனவே மூடப்பட்ட மதுக்கடைகளையும் திறப்பதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட கொள்கை எனும் நிலையில், மதுக்கடைகளை மூடுவதற்கு பதிலாக புதிய மதுக்கடைகளை திறப்பது நியாயமற்றது. ஆகவே, புதிய மதுக்கடைகள் திறப்பு கைவிடப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் ஆலோசனையை ஏற்று தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டன. மார்ச் 25 ஆம் தேதி முதல் மே மாதம் 6 ஆம் தேதி வரை மதுக்கடைகள் மூடப்பட்டதால் தமிழக மக்கள் 43 நாட்கள் மிகவும் நிம்மதியாக இருந்தனர். ஆனால், தமிழகத்தில் கொரோனா அச்சம் விலகுவதற்கு முன்பாகவே மே 7 ஆம் தேதி சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் மதுக்கடைகளை தமிழக அரசு திறந்தது. மதுக்கடைகளில் மக்கள் நெரிசல் அதிகரித்த நிலையில், அதனால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால் மதுக்கடைகளை மூட ஆணையிட வேண்டும் என்று கோரி பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று முறையீடு செய்து மே 16&ஆம் தேதி முதல் மதுக்கடைகளை தமிழக அரசு மீண்டும் திறந்தது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதற்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டதும் முக்கிய காரணம் என்பதில் ஐயமில்லை.

மதுக்கடைகள் மூடப்பட்டால் மட்டும் தான் தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும். எனவே, தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்கவேண்டும்; விரைவில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை பா.ம.க. கோருகிறது.

‘வன்னியர்களுக்கு 17 சதவிகிதம் இடஒதுக்கீடு’ தீர்மானம் இயற்றிய பாமக

இவை தவிர குறுவைப் பயிர்களைக் காக்க காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்க வேண்டும், வங்கிக்கடன் தவணைகள் மீதான வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும், மகளிர் சுயஉதவிக் குழு கடன் தவணைகளை நிறுத்திவைக்க வேண்டும், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு: அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனை வழங்கிய மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோருக்கு பாராட்டு, பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளின் இறுதிப் பருவ தேர்வை ரத்து செய்யவேண்டும், 11ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வைத்த மருத்துவர் ராமதாஸூக்கு நன்றி, வேடந்தாங்கல் சரணாலயப் பகுதிக்குள் தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்டது குறித்து விசாரணை தேவை, காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், தொடர்வண்டிச் சேவைகளை தனியார் மயமாக்கக்கூடாது ஆகிய தீர்மானங்களும் இயற்றப்பட்டன.