கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக முகத்துவாரப் பகுதியில் இன்று அதிகாலை படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் ஒருவர் மாயமானார். கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இதனால் கடந்த 5 மாதங்களில் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற படகுகள் கவிழ்ந்து 4 மீனவர்கள் உயிரிழந்து உள்ளனர்.

இதனையடுத்து முகத்துவாரத்தில் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளை அகற்றக்கோரி மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த பெறின் (31) என்பவருக்கு சொந்தமான படகில், அவருடன் சேர்த்து 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர். அப்போது முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில் கடலில் தத்தளித்த மீனவர்கள் 5 பேர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், பெறின் மாயமானார். இதனையடுத்து 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் அவரை தேடி வருகின்றனர். இதனிடையே முகத்துவாரத்தை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 10ஆம் தேதி முதல்வர் குமரிக்கு வரும்போது போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்