கோயிலுக்கு நிகரான மனம்! ஜோதிகா குறித்து நெகிழும் டைரக்டர்

 

கோயிலுக்கு நிகரான மனம்! ஜோதிகா குறித்து நெகிழும் டைரக்டர்

நடிகை ஜோதிகாவுக்கு இன்று பிறந்தநாள். திரைப்பிரபலங்கள் பலரும் அவரும் வாழ்த்து சொல்லி வரும் நிலையில், இயக்குநர் இரா. சரவணன், கோயிலுக்கு நிகரான மனம் என்று ஜோதிகா குறித்து நெகிழ்ந்துள்ளார்.

சசிக்குமார், ஜோதிகா நடிக்கும் படத்தை அவர் இயக்கி முடித்திருக்கும் வேளையில், ஜோதிகாவின் பிறந்த நாள் வாழ்த்தாக அவர் தனது முகநூலில் பதிவிட்டிருப்பதாவது:

கோயிலுக்கு நிகரான மனம்! ஜோதிகா குறித்து நெகிழும் டைரக்டர்

’’பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்வதற்கு முன், ஜோதிகா முன்னால் கதை சொல்ல உட்கார்ந்த நாள் அப்படியே நினைவில் நிற்கிறது. ஆரம்பிக்கும் போதே சொல்வதில் லேசான பதட்டம். “இது ரொம்ப நல்ல கதைன்னு தங்கதுரை சாரும் ராஜா சாரும் சொல்லிட்டாங்க. நீங்க தைரியமா சொல்லுங்க” என நம்பிக்கை கொடுத்தவர், இப்போது மொத்த படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்திருக்கிறார் பக்காவாக!

படத்தில் பெரும்பாலும் உள்ளூர் பகுதி மக்களையே நான் நடிக்க வைத்தேன். ஜோதிகா மாதிரியான பெரிய நட்சத்திரங்கள் நடிக்கிற காட்சியில் உள்ளூர் மக்களை நடிக்க வைப்பது ரொம்பவே ரிஸ்க். ஆனாலும், ‘இந்தப் படத்துக்கு இந்த முகங்கள் தான் தேவை’ என்றேன். கொஞ்சமும் தயங்காமல் அந்த மக்களோடு ஐக்கியமானார் ஜோதிகா. “இம்புட்டு செவப்பா இருக்கியே ஆத்தா” என எங்கள் வயற்காட்டுப் பெண்கள் ஆச்சர்யப்பட, நெகிழ்ந்து போனார் ஜோதிகா. வயற்காடு, கோயில், குளம், திருவிழா என ஒவ்வொன்றையும் வியந்து பார்த்து, அந்த மண்ணின் மனுஷியாகவே மாறினார் ஜோதிகா.

கோயிலுக்கு நிகரான மனம்! ஜோதிகா குறித்து நெகிழும் டைரக்டர்

தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் ஷூட்டிங். வந்தோம் நடித்தோம் என்றில்லாமல் மருத்துவமனை சூழலைக் கவனித்தார். மக்களுடன் அக்கறையாகப் பேசினார்.

தஞ்சை பெரிய கோயில் குறித்து அவர் பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில், இரண்டு நாட்கள் கழித்து நடந்தது குறித்து நான் முகநூலில் விளக்கம் எழுதினேன். “இதுகுறித்து நீங்க பேசாததால நீங்களும் என் கருத்தை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களோன்னு நினைச்சிட்டேன் சார். இப்போதான் உங்க பதிவைப் படிச்சுக் காட்டினாங்க. தஞ்சாவூர்க்காரரா நீங்க என்னை நம்புறதே போதும். ராசா மிராசுதார் ஹாஸ்பிடலுக்கு நேர்ல போய் நம்மால முடிஞ்ச உதவியை செய்யனும்னு நினைக்கிறேன் சார்” என்றார். ஆனால், கொரோனா குறுக்கிட்டது. வேறு யாராக இருந்தாலும் கொரோனா பரபரப்பில் அந்த விஷயத்தைக் கிடப்பில் போட்டிருப்பார்கள். ஆனால், மருத்துவமனைக்கு என்னை நேரில் அனுப்பி, முதல்வர் மருதுதுரையுடன் பேச வைத்து, மருத்துவமனைக்குத் தேவையான உதவிகளைக் கேட்டறிந்து, 25 லட்ச ரூபாய் நிதியை அறிவித்தார் ஜோதிகா. கோயிலுக்கு நிகரான மனம்!

கோயிலுக்கு நிகரான மனம்! ஜோதிகா குறித்து நெகிழும் டைரக்டர்

நடிப்பில் அவர் அசகாயர் என்பது எல்லோரும் அறிந்ததே… இந்தப் படத்தில் மாதங்கி என்கிற பாத்திரத்தில் குணவதியாக, குடும்பத் தலைவியாக, பாசத்துக்காகத் தத்தளிக்கும் தங்கையாக அவர் வாழ்ந்திருக்கிறார். டப்பிங், எடிட்டிங் பணிகளைப் பார்க்கும் போதே கண்களைத் ததும்ப வைக்கிறது அவருடைய பாசப் போராட்டம். பந்த பாச உறவுகளில் நெகிழ்ந்து கிடக்கும் நம் டெல்டா மாவட்ட வாழ்வியலை மாதங்கியாக கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் ஜோதிகா. எங்கள் மண்ணின் மனுஷியாக வாழ்ந்து காட்டியிருக்கும் மாதங்கிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.’’