150 அடி மின் கோபுரத்திலிருந்து கீழே குதித்து இளைஞர் தற்கொலை: மனைவி, குழந்தைகள் கண்முன்னே நடந்த பயங்கரம்!

 

150 அடி மின் கோபுரத்திலிருந்து கீழே குதித்து இளைஞர் தற்கொலை: மனைவி, குழந்தைகள் கண்முன்னே நடந்த பயங்கரம்!

குடும்பப் பிரச்சனை காரணமாக  200 அடி உயர மின் கோபுரத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை: குடும்பப் பிரச்னை காரணமாக 150 அடி உயர மின் கோபுரத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நெல்வாய்பாளையம் அருகே ஏந்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்  ரமேஷ். இவருக்கு கீதா என்ற மனைவியும், கிரிஜா மற்றும் ஆர்யா ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர். ரமேஷ்  தனது மைத்துனருடன் இணைந்து சென்னையில் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் 5 நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக் கொண்டு வந்தவர் மீண்டும் வேலைக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. 

death

இந்நிலையில் ரமேஷ் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட விரக்தியடைந்த அவர், அப்பகுதியில் உள்ள 150 அடி உயரமுள்ள உயர்மின் கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. தகவலறிந்து அப்பகுதிக்கு ஆரணி டி.எஸ்.பி. செந்தில் தலைமையில் களம்பூர் போலீசாரரும், ஆரணி தீயணைப்பு துறையினரும் வரவழைக்கப்பட்டனர். 108 ஆம்புலன்சும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. 

 

போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். ரமேஷின் மனைவி, குழந்தைகள், உறவினர்கள் அனைவரும் தற்கொலை முடிவைக் கைவிட்டு கீழே இறங்கி வருமாறு அழுதனர். ஆனால் அவர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவே, கயிற்றின் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் மின் கோபுரம் மீது ஏறினர். 

ஆனால்  யாரேனும் மேலே வந்தால் குதித்து விடுவேன் என்று கூறிய ரமேஷ் கீழே இறங்க மறுத்தார். இதை தொடர்ந்து அவர் 150 அடி உயர மின் கோபுரத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது. இதையடுத்து ரமேஷின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.