15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று, அம்மாநில மக்களுடன் சரளமாக உரையாடப் போவதாகத் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று, அம்மாநில மக்களுடன் சரளமாக உரையாடப் போவதாகத் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜகவில் அடிப்படை உறுப்பினராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய தமிழிசை சவுந்தரராஜன் அதன்பிறகு பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். தமிழக பாஜகவின் தலைவராக பல்வேறு சமயங்களில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல் அவர்களுக்கான பதிலை தெளிவாகக் கூறி அசராமல் வலம்வந்தார். அந்த வகையில் தமிழிசையின் தமிழக பாஜக தலைவர் பொறுப்பு நிறைவடையும் நிலையில் அவருக்கு தெலுங்கானா ஆளுநராக பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட தமிழிசை , அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைச் சந்தித்து பேசினார். அப்போது , அனைவரிடமும் நட்பாக பழக எண்ணம் உள்ளது. அதேசமயம் அதிகாரிகள் கடமைகளைச் சரிவர செய்ய வேண்டும். தினசரி தாம் யோகா செய்து வருவது போல, ஆளுநர் மாளிகை ஊழியர்களும் யோகா செய்து உடல்நலத்தை பேணி காக்க வேண்டும். இங்குள்ள சமூக பொருளாதார பிரச்னைகள் குறித்து தெரிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் தமது பணி இருக்கும்’ என்றார்.தொடர்ந்து பேசிய அவர், அடுத்த 15 நாட்களுக்குள் தெலுங்கு மொழியை கற்று, அம்மாநில மக்களுடன் சரளமாக உரையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.