14 தொழிலாளர்களுக்கு கொரோனா… தனியார் நூற்பாலைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

 

14 தொழிலாளர்களுக்கு கொரோனா… தனியார் நூற்பாலைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

திருப்பூர்

காங்கேயம் அருகே தனியார் நூற்பாலையில் பணிபுரியும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அந்த ஆலைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பெருமாள்மலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் 4 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இதனையடுத்து, ஆலையில் உள்ள மற்ற தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், நேற்று முன்தினம் மேலும் 14 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து தொற்றுக்குள்ளான அனைவரும் ஆலை வளாகத்தில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

14 தொழிலாளர்களுக்கு கொரோனா… தனியார் நூற்பாலைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

எனினும் வழக்கம் போல் ஆலை செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று, காங்கேயம் வட்டாட்சியர் சிவகாமி தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, ஊழியர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் ஆலை தொடர்ந்து இயங்கி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாக வட்டாட்சியர் சிவகாமி ஆலையை பூட்டி சீல்வைத்தார். இந்த சம்பவம் காங்கேயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.