சசிகலாவின் அண்ணனுக்கு ஜாமீனில் செல்ல முடியாத பிடிவாரண்ட் ஏன்? வழக்கின் முழு விபரம்

 

சசிகலாவின்  அண்ணனுக்கு  ஜாமீனில் செல்ல முடியாத பிடிவாரண்ட் ஏன்? வழக்கின் முழு விபரம்

நில அபகரிப்பு வழக்கில் சசிகலாவின் அண்ணனும், டிடிவி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம், அமமுக தஞ்சை மாநகர மாவட்டச் செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக திருவையாறு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ‘ஜாமீனில் செல்ல முடியாத வாரண்ட்’ பிறப்பித்துள்ளது.

தஞ்சாவூர் தெற்கு வீதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மனைவி வளர்மதி. இவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தஞ்சாவூர் அம்மன்பேட்டை அருகேயுள்ள ராஜேந்திரம் ஆற்காடு என்ற கிராமத்தில் 4.84 ஏக்கர் நிலம் வாங்கி அதில் பண்ணைத் தோட்டம் அமைத்துள்ளார். 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள அந்நிலைத்தை அடிமாட்டு விலைக்குக் கேட்டு சசிகலாவின் சகோதரரும், டிடிவி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம் தொடர்ந்து தொல்லைக்கொடுத்து, மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

சசிகலாவின்  அண்ணனுக்கு  ஜாமீனில் செல்ல முடியாத பிடிவாரண்ட் ஏன்? வழக்கின் முழு விபரம்

இதனால் பயந்துபோன மனோகரன், தஞ்சை ராஜா டிம்பர் டிப்போ உரிமையாளர் முருகராஜ் என்பவருக்கு அந்த இடத்தை விற்க முடிவுசெய்து, 65 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி, அதில் 15 லட்சம் ரூபாயை முன்தொகை பெற்றுள்ளார். மேலும் அசல் பத்திரங்களையும் அவரிடம் கொடுத்துள்ளார்.


இதையறிந்த, சுந்தரவதனம், ராஜா டிம்பர் டிப்போ உரிமையாளர் முருகராஜிடமிருந்து பத்திரத்தை மிரட்டி வாங்கியுள்ளார். மேலும், இடத்தை தங்களுக்கே விற்க வேண்டும் எனக்கூறி அவரது ஆட்கள், மனோகரன், அவரது மனைவி வளர்மதி மற்றும் அவர்களது பிள்ளைகளை 04.08.2008 அன்று காரில் கடத்திச் சென்று, ஒரு ரூமில் அடைத்துவைத்து, மிரட்டி, தாக்கியுள்ளனர். இதில் பயந்துபோன மனோகரன் தனது நிலத்தை சுந்தரவதனத்திற்கு, தஞ்சையை அடுத்துள்ள கரந்தையில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் வெறும் 7.18 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்துகொடுத்த பின்னரே அவர்கள் அனைவரையும் சுந்தரவதனமும் அவரது ஆட்களும் விடுவித்துள்ளனர்.

ராஜா டிம்பர் டிப்போ உரிமையாளரும் இதில் கூட்டுச்சதி செய்துள்ளார் என்பது பிறகுதான் தெரிய வந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக, அவரது புகார் மனுவை நடுக்காவேரி காவல் நிலைய போலீஸார் உள்ளிட்ட தஞ்சை மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் வாங்க மறுத்ததால், வளர்மதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2015-ம் ஆண்டு ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்பேரில், குற்றவாளிகள் மீது தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், போலீஸார் வழக்கு விசாரணையை முறையாக நடத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டனர்.

இதனால் அதிருப்தியடைந்த வளர்மதி, வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும், நில அபகரிப்பு சிறப்பு பிரிவு போலீஸார் வழக்கு விசாரணையை முறையாக நடத்தாமல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு ரிட் தாக்கல் செய்தார். அதனடிப்படையில், வழக்கு விசாரணையை தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.


இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் திருவையாறு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு ஜுலை 22-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், 13.08.2020 அன்று மாஜிஸ்திரேட் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அன்றை தினம் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேரும் ஆஜராகததால், அவர்கள் அனைவருக்கும் எதிராக ஜாமீனில் செல்ல முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


ஆனால், செப்டம்பர் 7-ம் தேதி குற்றஞ்சாட்டப்பட்ட எவரையும் போலீஸார் ஆஜர்படுத்தாததால், 11 பேரில் மூன்று பேரைக்கூட உங்களால் கைது செய்ய முடியவில்லையா என போலீஸாரை கண்டித்த மாஜிஸ்திரேட், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுந்தரவதனம் உள்ளிட்ட 11 பேரையும் அக்டோபர் 6-ம் தேதி ஆஜர்ப்படுத்த வேண்டும் என மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.