பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க ‘கேடயம்’திட்டம்: திருச்சியில் அறிமுகம்

 

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க ‘கேடயம்’திட்டம்: திருச்சியில் அறிமுகம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், குற்றச்சம்பங்களை தடுக்கும் விதமாக திருச்சி சரக காவல் துறையின் சார்பாக “கேடயம்”என்ற செயல் திட்டத்திற்கான துவக்க விழா திருச்சி சுப்ரமணிபுரம் அருகே உள்ள காவல் துறை கூட்டரங்கில் நடைபெற்றது.

திருச்சி மண்டல ஐ.ஜி ஜெயராம், காவல் துறை சரக துணை தலைவர் ஆனி விஜயா மற்றும் திருச்சி, பெரம்பலூர், கரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க ‘கேடயம்’திட்டம்: திருச்சியில் அறிமுகம்

ஐந்து மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான, வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் “கேடயம்” செயல் திட்டத்தை திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா துவக்கி வைத்தார்.

இந்த செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான – குற்ற நடவடிக்கைகளை ஆய்வு செய்தல், திட்டத்தினை வகுத்தல், திட்டத்தை நடைமுறைப் படுத்துதல், திட்டத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்தல் ஆகும்.

நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.ஐ.ஜி ஆனி விஜயா, இது ஒரு செயலி அல்ல – இந்த திட்டத்தை பொறுத்தவரை திருச்சி சரகத்தில் எங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வன்முறைகள், பிரச்சினைகள் நடக்கிறது என்பதனை முழுமையாக ஆய்வு செய்து முன்னதாகவே குற்றச்சம்பங்களை தடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட இடங்களில் போஸ்கோ போன்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகம் நடக்கும் 30 இடங்களை கண்டறிந்துள்ளோம்,அந்த இடங்களில் தொடர் குற்றச்சம்பங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.

நிறைய இடங்களில் பெண்கள் தங்களுக்கான பிரச்சினைகளை சொல்ல காவல் நிலையங்களுக்கு வருவதற்கு முன் வருவதில்லை. அதனால் தான் காவல்துறை தரப்பில் இருந்து நிறைய தொலைபேசி எண்களை கொடுத்து பெண்கள் புகார் தெரிவிக்க வழிவகை செய்து உள்ளோம்.

குறிப்பாக திருச்சி சரகத்தில் என்னுடைய தொலைபேசி எண்ணையும் கூட கொடுத்தேன். பெரிய அளவில் பெண்கள் கால் செய்து தொடர்ந்து புகாரை தெரிவித்து வருகின்றனர். உடனடியாக அந்த புகார்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள கிராமபுரங்களில் அதிகமாக இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது,
குறிப்பாக மாவட்ட எல்லையோரங்களில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. பல இடங்களில் சிரார் காதல் திருமணங்களே பெரும்பாலான குற்ற சம்பவங்களுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது. அது போன்று அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து மேலும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

காவல் துறை மட்டுமல்லாது தன்னார்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள் இணைந்து குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதிகளில் தொடர் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்த உள்ளோம்’’ என்றார்.